சேதமடைந்த கட்டிடங்களில் இயங்கும் பள்ளிக்கூடங்கள் விபரீதம் நிகழும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?

சேதமடைந்த கட்டிடங்களில் இயங்கும் பள்ளிக்கூடங்களால் விபரீதம் நிகழும் முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.;

Update: 2022-10-16 18:45 GMT

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நெல்லையில் தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி கட்டிடங்களையும் ஆய்வு செய்து, உறுதி தன்மையற்றதை இடித்து அகற்ற அரசு உத்தரவிட்டது. அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு படிப்படியாக அந்த கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

1,806 பள்ளிகள்

விழுப்புரம் மாவட்டத்தில் 1,208 அரசு பள்ளிகள், 17 நகராட்சி பள்ளிகள், 65 அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகள், 199 நிதி உதவி பெறும் பள்ளிகள், 23 பகுதிநேர நிதி உதவி பெறும் பள்ளிகள், 89 மெட்ரிக் பள்ளிகள், 140 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், 3 சிறப்பு பள்ளிகள், 26 சி.பி.எஸ்.இ. பள்ளிகள், 36 சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 1,806 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் தொடக்கப்பள்ளிகளில் 1,39,279 மாணவ- மாணவிகள், நடுநிலைப்பள்ளிகளில் 77,975 மாணவ- மாணவிகள், உயர்நிலைப்பள்ளிகளில் 52,219 மாணவ- மாணவிகள், மேல்நிலைப்பள்ளிகளில் 45,296 மாணவ- மாணவிகள் என மொத்தம் 3 லட்சத்து 14 ஆயிரத்து 769 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் 12,628 ஆசிரிய-ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.

சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள்

இம்மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு பட்டியலின்படி அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 363 கட்டிடங்கள் சேதமடைந்த கட்டிடங்கள் என கண்டறியப்பட்டன. இவற்றில் 274 கட்டிடங்கள் இதுவரை இடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 89 கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளன. இதேபோல் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 104 கட்டிடங்கள் சேதமடைந்த கட்டிடங்கள் என கண்டறியப்பட்ட நிலையில் அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்பட்டுள்ளன.

சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தும் பணி ஒருபுறம் விரைவாக நடந்து வருவதாக சொல்லப்பட்டாலும் சில இடங்களில் சேதமடைந்த கட்டிடங்களை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தாமல் பாதியிலேயே அப்பணியை கிடப்பில் போட்டுள்ளனர். இன்னும் சில இடங்களில் சேதமடைந்த கட்டிடங்களை முழுமையாக இடித்தபோதிலும் அதன் கட்டிட கழிவுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் அங்கேயே போட்டு வைத்துள்ளனர். இதுதவிர சில பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் என கண்டறிந்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதோடு சரி அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படாமல் அக்கட்டிடங்களை பூட்டியே வைத்துள்ளனர். இதனால் பள்ளி இடைவேளை நேரங்களில் மாணவ- மாணவிகள் அந்த கட்டிடத்திற்குள் விளையாடும்பட்சத்தில் ஏதேனும் விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மாணவ- மாணவிகள் அச்சம்

மேலும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் முழுமையாக இடித்து அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் அந்த இடத்தில் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கையும் உடனடியாக எடுத்ததாக தெரியவில்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தில் படித்து வந்த மாணவ- மாணவிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படாததாலும், போதிய வகுப்பறைகள் இல்லாததாலும் அம்மாணவ- மாணவிகள் அப்பள்ளியின் வளாகத்தில் தரையிலும், மரத்தடியில் அமர்ந்தும் மற்றும் அருகில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள், தனியார் கட்டிடத்திலும் வைத்து தற்காலிகமாக கல்வி கற்றுத்தரப்படுகிறது.

அதுபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்கள் ஆங்காங்கே சிறு, சிறு பழுதுகளுடன் இயங்கி வருகிறபோதிலும் அந்த கட்டிடங்களை செப்பனிட்டு சீரமைத்தால் இன்னும் சில ஆண்டுகள் அங்கு வகுப்புகள் நடத்தப்படும் நிலையில் இருக்கும் கட்டிடங்களையும் அதிகாரிகள் சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்காததால் அங்குள்ள மாணவ- மாணவிகள் ஒருவித அச்சத்துடனேயே கல்வி பயின்று வருகின்றனர்.

கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுமா?

மேலும் மாவட்டத்தில் உள்ள பல தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் போதுமான எண்ணிக்கையில் கழிப்பறைகள் இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் இயற்கை உபாதைகளை கழிக்க கடும் அவதியடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவ-மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டு விட்டு கை கழுவுவதற்கு போதுமான வசதிகள் இல்லை. பல பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்து தரப்படவில்லை. பெரும்பாலான பள்ளிகளில் காவலாளிகள் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளதால் இரவில் பள்ளி வளாகத்தில் சமூகவிரோதிகள் புகுந்து பலவித சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வதற்கு போதுமான துப்புரவு பணியாளர்களும் இல்லை. அரசு பள்ளிகளில் இதுபோன்ற பல பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு எட்டப்படாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கள்ளக்குறிச்சி

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் ரங்கப்பனூர் கிராமத்தில், அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள்.

இங்கு 4 வகுப்பறை கட்டிடங்கள் மட்டுமே உள்ளது. ஏற்கனவே இங்கு இருந்த பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்ட நிலையில், ஏஞ்சியுள்ள 4 கட்டிடங்களில் தற்போது பெய்த மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த கட்டிடமும் அதன் பலத்தை இழந்து வருகிறது. இதனால் அதிலும் தற்போது மாணவ, மாணவிகள் அமர்ந்து படிப்பதில்லை. மாறாக தற்போது மரத்தடியில் தான் அவர்களது வகுப்பறைகள் நடந்து வருகிறது. மழை பெய்தால், இவர்கள் நிலை மேலும் மோசமாகி விடுகிறது. பல்வேறு இடையூறுகளை கடந்து கல்வி கற்றுவரும் இந்த பள்ளி மாணவர்களுக்கு சரியான தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோன்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளில் கட்டிடம் வசதி இல்லாமல் உள்ளது.

மாணவ சமுதாயம் முன்னேறவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக அரசு, பள்ளிகள் சீரமைப்பு விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகளை சிறப்பான முறையில் ஏற்படுத்திக்கொடுத்து குழந்தைகள் அச்சமின்றி பள்ளிக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பள்ளி மாணவர்கள் கருத்து:-

திருப்பாச்சனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவி சத்யப்பிரியா:-

எங்கள் வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. இதனால் வகுப்பறையில் அமர்ந்து பாடம் படிக்க அச்சமாக இருக்கிறது. மழை நேரங்களில் தண்ணீர் வகுப்பறைக்குள் ஒழுகுவதால் பாடப்புத்தகங்களும் நனைகிறது. எனவே எங்கள் வகுப்பறையை உடனடியாக சரிசெய்து தர வேண்டும்.

கொடுக்கூர் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவி பல்லவி:-

எங்கள் பள்ளியில் வகுப்பறை கட்டிடம் மிகவும் சேதமடைந்துள்ளதால் இப்ப விழுமோ, எப்ப விழுமோ... என்ற அச்சத்துடனேயே பள்ளிக்கு வந்து செல்கிறோம். வகுப்பறையின் தரைகளும் ஆங்காங்கே பெயர்ந்து கிடக்கிறது. கழிவறை இருந்தும் அக்கட்டிடமும் சேதமடைந்துள்ளதால் அதை பயன்படுத்த முடியவில்லை. பள்ளியை சுற்றி மதில்சுவர் இருக்கின்றபோதிலும் உயரம் குறைவாக உள்ளதால் இரவு நேரங்களில் மாணவர்கள் அல்லாத பலர் பள்ளிக்குள் வந்து அட்டகாசம் செய்கின்றனர். எனவே மதில் சுவரை உயர்த்திக்கட்ட வேண்டும். அதுபோல் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களையும் உடனடியாக சீரமைக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்