சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்-ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்-ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்;
ஆர்.எஸ்.மங்கலம்,
சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
யூனியன் சாதாரண கூட்டம்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் சாதாரண கூட்டம் யூனியன் தலைவர் ராதிகா பிரபு தலைமையில் யூனியன் துணைத் தலைவர் சேகர், ஆணையாளர் முத்துகிருஷ்ணன், திட்ட மேலாளர் ரவி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் முன்னிலையில் நடைபெற்றது. யூனியன் இளநிலை உதவியாளர் மணிகண்டன் வரவேற்றார்.
கூட்டத்தில் கவுன்சிலர் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
கவுன்சிலர் பிரபு: கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு யூரியா உரம் குறைவாக தான் வந்துள்ளன. ஆனால் தனியார் கடைகளுக்கு மொத்தமாக விற்று விடுகின்றனர். தனியார் உரக்கடைக்கு சென்று யூரியா உரம் கேட்டால் யூரியா உடன் பொட்டாஷ் மற்றும் இதர உரங்கள் வாங்கினால் மட்டுமே கொடுக்கின்றனர். மேலும் உரங்களை அதிக விலைக்கு விற்பதாக சம்பந்தப்பட்ட விவசாய அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை.
சாலையை சீரமைக்க வேண்டும்
அ.தி.மு.க. கவுன்சிலர் பத்மினி கருப்பையா: பாரனூர் ஆதிதிராவிடர் காலனியில் பள்ளத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரை மேடான இடத்தில் மாற்றியமைக்க வேண்டும். ஆதிதிராவிடர் மயானத்திற்கு செல்லும் தெற்கு, வடக்கு பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். கொத்திடல்-களக்குடி செல்லும் தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும்.
கவுன்சிலர் யோகேஸ்வரன்: சிறுவண்டல், கொசக்குடி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். தாழ்வாக தொங்கும் மின் வயர்களை சரி செய்ய வேண்டும். தோட்டாமங்கலத்தில் புதியதாக டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும்.
கவுன்சிலர் வெங்கடாசலபதி: தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோட்டோரத்தில் உள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும். கருங்களத்தூர், பகவதிமங்கலம் ஆகிய ஊர்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால் சீராக குடிநீர் வழங்க வேண்டும்.
யூனியன் தலைவர் ராதிகா பிரபு: கவுன்சிலர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது. முடிவில் யூனியன் மேலாளர் அருள் முடியப்ப தாஸ் நன்றி கூறினார்.