சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை இடித்து அகற்ற வேண்டும்

முத்துப்பேட்டை அருகே சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-10-16 18:45 GMT

தில்லைவிளாகம்:

முத்துப்பேட்டை அருகே சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் நிழலகம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா மேலப்பெருமழை கிராமம் உள்ளது. இந்த கிராம மக்களின் பயன்பாட்டிற்காக அப்பகுதியில் பயணிகள் நிழலகம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து தினமும் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம் போன்ற பகுதிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர்.

மேலும் வேலைக்கு செல்பவர்கள் என பல்வேறு தேவைகளுக்கு மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள் இந்த பயணிகள் நிழலகத்தில் இருந்து பஸ் ஏறி சென்று வருகின்றனர்.

சேதமடைந்து உள்ளது

இந்த நிலையில் இந்த பயணிகள் நிழலகம் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ளது. கட்டிடத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எப்போதும் வேண்டுமானாலும் பயணிகள் நிழலகம் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இதனால் இந்த பயணிகள் நிழலகத்தை பயன்படுத்த முடியாத நிலையில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர். மேலும் மழை, வெயில் காலங்களில் சாலையோரத்தில் நின்று பஸ்சில் ஏறிசெல்ல வேண்டிய நிலை உள்ளது.

சீரமைக்க வேண்டும்

மழைக்காலத்தில் இந்த பயணிகள் நிழலகத்தின் உள்ளே மழைநீர் கசிவதால் நிழலகத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைத்து தர வேண்டும்.

அல்லது அந்த சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்