யாத்ரிகர்களுக்கு உணவு அளித்த சத்திரம் சிதிலம் அடைந்து காணப்படும் அவலம்
தஞ்சை அருகே 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த யாத்ரிகர்களுக்கு உணவு அளித்த சத்திரம் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை அருகே 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த யாத்ரிகர்களுக்கு உணவு அளித்த சத்திரம் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்திரங்கள்
தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் மற்றும் முக்கிய இடங்களில் இன்றைக்கு அரசு இல்லங்கள், விடுதிகள் என அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கட்டி வைத்துள்ள நிலையில் இதில் பணிகாரணமாக அதிகாரிகள் தங்கி செல்கின்றனர். ஆனால் பண்டைய காலத்தில் வாகன வசதிகள் இல்லை. இதனால் பெரும்பாலான பகுதிகளுக்கு நடந்தோ, அல்லது மாட்டு வண்டிகளிலோ பொதுமக்கள் பயணம் மேற்கொள்வது வழக்கம்.இவ்வாறு செல்பவர்கள் வழியில் இளைப்பாறுவதற்காக மண்டபங்கள், சத்திரங்கள் கட்டப்பட்டன. குறிப்பாக மன்னர்கள் காலத்தில் தமிழகம் முழுவதும் சாதாரண மனிதர்களுக்கு ஊர் விட்டு ஊர் செல்லக்கூடியவர்கள், கோவிலுக்கு யாத்திரையாக செல்லக்கூடியவர்கள் சாலை ஓரங்களில் தங்கிச்செல்லும் வகையில் சத்திரங்கள் அமைத்து அந்த சத்திரங்களில் தங்கும் இடம், உணவு எல்லாமே இலவசமாக கொடுத்து வந்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் இரவில் ஓய்வெடுப்பது மற்றும் மாணவர்களுக்கு தேவையான கல்வி கற்கும் இடமாகவும் இருந்து வந்துள்ளது.
200 ஆண்டுகளுக்கு முன்பு....
இந்த வகையில் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்கள் காலத்தில் தஞ்சையில் இருந்து ராமேஸ்வரம் வரைக்கும் பயணம் செய்யக்கூடிய யாத்ரீகர்களுக்காக சிரேஸ்சத்திரம், முத்தம்மாள் சத்திரம், சைதாம்பாள் சத்திரம் என வழி நெடுக சத்திரங்கள் அமைந்திருந்தார்கள்.இந்த சத்திரம் அமைந்துள்ள பகுதியில் மருத்துவம் செய்வதற்காக மருத்துவ வசதியும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தஞ்சை- பட்டுக்கோட்டை சாலை சூரக்கோட்டை பகுதியில் அரச குடும்பத்தை சேர்ந்த பெண்மணியான சைதாம்பாள் பாய் நினைவாக 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது தான் சைதாம்பாள் சத்திரம்.
சிதிலமடைந்து காணப்படும் அவலம்
200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த சத்திரம் தற்போது சிதிலம் அடைந்து காணப்படுகிறது. மேலும் மண்டபம் முட்புதர்களாகவும் காட்சி அளிக்கிறது. இந்த சத்திரத்திற்கென பல ஏக்கர் விலை நிலங்களும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த விளைநிலங்களில் விளையும் உணவைக்கொண்டு யாத்ரீகர்களுக்கு தேவையான உணவு மற்றும் செலவை செய்திருக்கிறார்கள். தற்போது அந்த விளைநிலங்கள் அனைத்தும் எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாமலேயே உள்ளததான் வேதனையான செய்தியாகும்.
சீரமைக்க கோரிக்கை
இந்த சத்திரத்தை தொல்லியல் துறை கையகப்படுத்தி புனரமைக்க வேண்டும். தற்போது நெடுஞ்சாலையில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு திறந்த வெளியாக உள்ள நிலையில் பொதுமக்கள் ஓய்வெடுக்கும் இடம் கூட இல்லாத நிலையில் இது போன்ற சத்திரத்தை மீட்டுருவாக்கம் செய்தால் தஞ்சையின் பாரம்பரியத்தை மேலும் அறிந்து கொள்வதற்கான வசதியாக இருக்கும்.இல்லாமல் போனால் சத்திரங்கள் பற்றிய வரலாறு முழுமையாக அழிந்து விடும், வருங்கால சந்ததியினர் இந்த சத்திரங்களை பற்றி தெரிந்து கொள்ள முடியாமலேயே போய்விடும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். எனவே இந்த சத்திரத்தை உரிய முறையில் சீரமைத்து, பாரம்பரிய இடமாக பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.