பொய்கை வாரச்சந்தையில் விற்பனைக்கு குவிந்த கறவை மாடுகள்

பொய்கை வாரச்சந்தையில் கறவைமாடுகள், சேவல் கோழிகளின் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.;

Update: 2023-10-17 17:45 GMT

பொய்கை வாரச்சந்தையில் கறவைமாடுகள், சேவல் கோழிகளின் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.

வாரச்சந்தை

வேலூரை அடுத்த பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மிகப்பெரிய அளவில் மாட்டுச் சந்தை நடந்து வருகின்றது. இந்தச் சந்தைக்கு சென்னை, ஓசூர் புங்கனூர், வாணியம்பாடி, ஆலங்காயம், திருவண்ணாமலை, சித்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து அதிக அளவில் கறவை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

திடகாத்திரமான, ஆரோக்கியமான கறவை மாடுகள் இங்கு கொண்டு வரப்படுகின்றன. இவற்றை வாங்குவதற்கு வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகளும் அதிக அளவில் வருகின்றனர்.

இந்த சந்தையில் கோழிகளும், கால்நடைகளுக்கு தேவையான கயிறு, தீவனம், கழுத்தில் கட்டும் மணி உள்ளிட்டவற்றின் விற்பனையும் விறுவிறுப்பாக இருக்கும்.

கால்நடைகள் குவிந்தன

நேற்று நடந்த சந்தைக்கு சுமார் 1,500 கறவை மாடுகளுக்கு மேல் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதேபோல் சேவல்களும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இவை முதல்நாள் நள்ளிரவில் இருந்தே வேன்கள், லாரிகளில் வந்த வண்ணம் இருந்தன.

ஆனால் சந்தையில் கழிவுநீர் தேங்கி காணப்பட்டதால் மாடுகளை விற்பனை செய்யஇடமின்றி கடைகளின் முன்பாக நிற்க வைத்து வியாபாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

சுமார் ரூ.2 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடந்திருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனர்

இதேபோல் மாலையில் நடந்த காய்கறி சந்தையிலும் அதிக அளவில் காய்கறிகளை வாங்க பொதுமக்கள் குவிந்ததால் காய்கறிகள் விற்பனையும் விறுவிறுப்பாக இருந்தது.

போக்குவரத்து நெரிசல்

இந்த சந்தைக்கு ஏராளமானோர் இருசக்கர வாகனங்களிலும் வந்தனர். இந்த வாகனங்களை பலர் அணுகு சாலையின் ஓரத்திலேயே இடையூறாக நிறுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்