தினமும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிப்பு; 4 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் தென்காசி புறவழிச்சாலை பணி

தினமும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் 4 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் தென்காசி புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.;

Update:2022-09-29 00:15 IST

தினமும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் 4 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் தென்காசி புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தனியாக பிரிந்த மாவட்டம்

நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிந்து தென்காசியை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் செயல்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தின் தலைநகராக ஆன பிறகு தென்காசியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.

தென்காசியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குற்றாலம் மிக சிறந்த சுற்றுலா தலமாக இருக்கிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகிறார்கள். மேலும், சபரிமலைக்கு இந்த வழியாக செல்லும் பக்தர்கள், தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் என ஏராளமானவர்கள் பல்வேறு வாகனங்களில் தென்காசிக்கு வந்து செல்கின்றனர்.

போக்குவரத்து நெருக்கடி

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள தென்காசிக்கு கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் பல்வேறு பணிகளுக்காக தினமும் வந்து செல்கின்றனர். தூத்துக்குடி, நெல்லை ஆகிய பகுதிகளில் இருந்தும் தென்காசி வழியாக கேரள மாநிலத்திற்கு மரத்தடிகள், சிமெண்டு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மதுரையில் இருந்து பல சரக்கு பொருட்கள் கனரக வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த வாகனங்கள் தென்காசி நகரின் வழியாக செல்லும்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

ரூ.76 கோடியில் புறவழிச்சாலை

தென்காசியில் போக்குவரத்து நெருக்கடியை போக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் பயனாக கடந்த 2018-ம் ஆண்டு இதற்கான திட்டம் ரூ.76 கோடி மதிப்பில் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.

தென்காசி ஆசாத் நகர் பகுதியில் இருந்து விளை நிலங்களின் வழியாக யானை பாலம் அருகில் சாலையை கடந்து இலஞ்சி சென்று அங்கிருந்து அய்யாபுரம் ெரயில்வே கேட் அருகில் இந்த புறவழிச்சாலை முடியும் அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 கிலோமீட்டர் தூரம் இந்த சாலை அமைக்கப்பட இருந்தது.

கிடப்பில் கிடக்கிறது

புறவழிச்சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணியும் நடைபெற்று வந்தது. ஆனால், தற்போது சுமார் 4 ஆண்டுகளாக எந்த பணியும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் இதுகுறித்து அரசுக்கு வலியுறுத்தி வருகிறார்கள்.

எனவே, தினமும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தென்காசியில் கிடப்பில் கிடக்கும் புறவழிச்சாலை பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

லாரி டிரைவர்

கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன்:-

நான் லாரியில் தூத்துக்குடிக்கு சென்று கேரளாவுக்கு உப்பு எடுத்து வருவேன். அங்கிருந்து பல்வேறு பொருட்களை ஏற்றிக்கொண்டு தமிழகத்துக்கு வருவேன். தென்காசி நகருக்குள் சென்று தான் தூத்துக்குடி, கேரளாவுக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆனால், தென்காசியில் போக்குவரத்து நெருக்கடி காரணமாக காலதாமதம் ஆகிறது.

இதனை தவிர்க்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால், இந்த பணி நீண்ட காலமாக கிடப்பில் கிடக்கிறது. இந்த புறவழிச்சாலை பணியை விரைந்து முடித்தால் பயண நேரமும், டீசல் செலவும் மிச்சமாகும்.

தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன்குளத்தைச் சேர்ந்த லாரி புக்கிங் அலுவலக உரிமையாளர் கோமு:-

தேங்காய் மற்றும் பல்வேறு சரக்குகளைகேரள மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்ய விவசாயிகளும், வியாபாரிகளும் எங்களிடம் வருவார்கள். அவ்வாறு வரும்போது தென்காசி நகருக்குள் சென்று கேரளாவிற்கு லாரிகள் செல்லும் பல நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு லாரிகள் சிக்கிக் கொள்ளும். இதனால் குறித்த நேரத்திற்கு சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, கிடப்பில் கிடக்கும் புறவழிச்சாலை பணியை விரைவாக தொடங்கி முடித்தால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

சுற்றுலா பயணிகள் வேதனை

வேட்டைக்காரன்குளத்தில் ஓட்டல் நடத்தி வரும் சாமி:-

குற்றாலம் சீசன் காலங்களில் தென்காசியில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். அப்போது வாகனங்கள் நீண்ட வரிைசயில் நிற்பதை காண முடியும். சுற்றுலா பயணிகளும் மிகுந்த வேதனைக்கு ஆளாவார்கள். தென்காசியில் புறவழிச்சாலை பணி அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக பல ஆண்டுகளுக்கு முன்பு கேள்வி பட்டுள்ளேன். ஆனால், இவ்வளவு நாளாகியும் அந்த பணி அப்படியே கிடக்கிறது. இந்த பணியை உடனடியாக தொடங்கி முடித்தால் வாகன ஓட்டிகள், தென்காசி நகர பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்