'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
சீரமைக்க வேண்டும்
சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம் அருகே உள்ள சாலை பல நாட்களாக சேதம் அடைந்து காணப்படுகிறது. இந்த இடத்தில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் விபத்துகள் அதிகம் ஏற்படலாம். உடனே சாலையை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சத்தியமங்கலம்.
அடிப்படை வசதி
அந்தியூரை அடுத்த பர்கூர் அருகே உள்ள சோளகணை மலைப்பகுதிக்கு செல்லும் 10 கி.மீ. தூர சாலை மோசமாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த ரோட்டில் இருசக்கர வாகனங்கள் தட்டு தடுமாறி சென்று வருகின்றன. மேலும் சோளகணையில் ரேஷன் கடை, ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை. சாலையை சீரமைக்கவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.ஏ.நடராஜன், பர்கூர்.
நாய் தொல்லை
பெருந்துறை, குன்னத்தூர் சாலையில் உள்ள பெருந்துறை பெண்கள் பள்ளிக்கூடம் அருகே ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகள், பொதுமக்கள், மாணவர்கள் அச்சத்துடனேயே அந்த வழியாக சென்று வருகின்றனர். வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் திணறுகின்றனர். எனவே பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பெருந்துறை.
தார்சாலை அமைக்கப்படுமா?
சத்தியமங்கலம் திருநகர்காலனியில் புவனேஸ்வரி அம்மன்கோவில் அருகே உள்ள மண் ரோட்டில் மழைக்காலங்களில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் சேறும், சகதியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. உடனே சிமெண்டு ரோடு அல்லது தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.டி.வடிவேல், திருமலைசாமி.
வேகத்தடை வேண்டும்
டி.என்.பாளையம் அருகே கள்ளிப்பட்டியில் உள்ள அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகிறது. இதனால் உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. அந்த பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. எனவே அத்தாணி- சத்தியமங்கலம் ரோட்டில் விபத்துகள் ஏற்படாத வண்ணம் வேகத்தடை மற்றும் தடுப்புகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கள்ளிப்பட்டி.
விபத்து ஏற்படும் அபாயம்
கோபியில் இருந்்து நாகர்பாளையம் செல்லும் ரோட்டில் தலைமை தபால் நிலைய அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. இந்த ரோடு போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளது. இதனால் அந்த ரோட்டில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உடனே அந்த ரோட்டில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
குப்பையில் பெயர் பலகை
அந்தியூர் அருகே ஒலகடம் காந்தி சிலை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்த பலகை பல மாதங்களாக அப்பகுதியில் உள்ள குப்பை கொட்டக்கூடிய இடத்தில் விழுந்து கிடக்கிறது. இதை முறையான இடத்தில் வைத்தால் வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
சந்திரன், ஒலகடம்.