தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 9962818888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2022-06-06 08:55 GMT

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

கோவை கணபதி ரூட்ஸ் பாலத்தில் இருந்து ரத்தினபுரி வழியாக 100 அடி ரோட்டுக்கு செல்லும் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம், சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து உள்ளது. மேலும் சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்களும் வாகனங்களில் சிக்கி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வி, கணபதி.

போக்குவரத்துக்கு இடையூறு

பொள்ளாச்சி-உடுமலை மெயின் ரோட்டில் இருந்து கிழக்கு காவல் நிலையம் செல்லும் வழியில் கடைகள், வணிக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை தாறுமாறாக நிறுத்தி செல்கின்றனர். இதனால் அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு வாகனங்களை முறையாக நிறுத்த பொள்ளாச்சி போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கன்னியப்பன், பொள்ளாச்சி.

தேன்கூடுகளால் அச்சம்

கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பல இடங்களில் ராட்சத தேன்கூடுகள் அமைந்துள்ளன. அவைகளில் இருந்து சில நேரங்களில் தேனீக்கள் கலைந்து பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருக்கும் ராட்சத தேன் கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சூர்யகுமார், கிணத்துக்கடவு.

விபத்து அபாயம்

ஆனைமலையில் மாசாணியம்மன் கோவில் பகுதியில் சாலை விரிவாக இருந்தும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு காரணம், சாலையின் இருபுறமும் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் நெரிசல் மிகுந்த நேரத்தில் பிற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தவிக்கின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வாகனங்களை தாறுமாறாக நிறுத்துபவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

முத்து, ஆனைமலை.

தொற்று நோய் பரவும் அபாயம்

பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன் பட்டியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் அந்த நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் தவித்து வருகின்றனர். மேலும் கழிவுநீர் கலந்து வரும் குடிநீரை குடிக்கும் பொதுமக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. எனவே குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மாரி, சூளேஸ்வரன்பட்டி.

நடைபாதையில் குழி?

கோத்தகிரி காம்பாய்கடை காளவாய் பகுதியில் குடியிருப்புகளுக்கு செல்ல பேரூராட்சி சார்பில் கான்கிரீட் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைபாதை சேதமடைந்து பாதைக்கு நடுவே பெரிய குழி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் குழியில் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதனால் அந்த குழி மறைத்து வைக்கப்பட்டு உள்ளது. எனினும் அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே பழுதடைந்த நடைபாதையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நவீன், கோத்தகிரி.

சாக்கடை கால்வாயில் அடைப்பு

கோவை மாநகராட்சி 41-வது வார்டு மருதமலை செல்லும் சாலையோரத்தில் ராமர் கோவில் அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இது தவிர அந்த சாக்கடை நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே சாக்கடை கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

விஜயகுமார், கோவை.

பயணிகள் அவதி

கோவை ரெயில் நிலையத்தில் 1-வது நடைமேடையில் காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக மின்விசிறிகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவை சரியாக இயங்குவது இல்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கூறினாலும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ரெயில் நிலையத்தில் உள்ள மின்விசிறிகள் தொடர்ந்து இயங்க இனிமேலாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜேக்கப், கோவைப்புதூர்.

Tags:    

மேலும் செய்திகள்