'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2022-08-25 17:09 GMT

மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் 

நிலக்கோட்டை தாலுகா பழைய சிலுக்குவார்பட்டியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்து வருகிறது. தொட்டியை தாங்கி நிற்கும் தூண்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மேல்நிலை குடிநீர் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

-பிரவீன்காந்த், பழைய சிலுக்குவார்பட்டி.

குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதி

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக அங்கு தண்ணீர் தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர் வினியோகம் முறையாக இல்லை. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தினமும் முறையாக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், திண்டுக்கல்.

நிழற்குடையை மறைக்கும் பதாகை

நிலக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள பயணிகள் நிழற்குடையை மறைத்து பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பதாகையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், நிலக்கோட்டை.

தெருநாய்கள் தொல்லை

வேடசந்தூரை அடுத்த எரியோடு பஸ் நிலையம் அருகே தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் அந்த வழியாக நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களை துரத்திச்சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

-பெரியசாமி, எரியோடு.

சாலையில் ஏற்பட்ட பள்ளம்

திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயின் குறுக்காக கட்டப்பட்ட தரைப்பாலத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதேபோல் நாகல்நகர் மேம்பாலத்தில் உள்ள சாலையிலும் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

-ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.

சுகாதாரமற்ற நிலையில் கழிப்பறை

தேனி புதிய பஸ் நிலையத்தில் உள்ள இலவச சிறுநீர் கழிப்பறை சுகாதாரமற்ற முறையில் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் கழிப்பறைக்குள் செல்லவே பயணிகள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. எனவே கழிப்பறையை சுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், தேனி.

தெருவிளக்கு வசதி வேண்டும்

பெரியகுளம் தென்கரை மூன்றாந்தல் பகுதியில் இருந்து தாமரைக்குளம் பிரிவு வரை உள்ள சாலையில் தெருவிளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், தென்கரை.

செயல்படாத சலவை கூடம் 

கடமலைக்குண்டுவை அடுத்த பாலூத்து கிராமத்தில் உள்ள சலவை கூடம் செயல்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சலவை கூடத்தை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. எனவே புதரை அகற்றிவிட்டு சலவை கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், பாலூத்து.

சாலை சீரமைக்கப்படுமா?

பெரியகுளம் புதிய பஸ் நிலைய பிரிவு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காதர் பாட்ஷா, பெரியகுளம்.

போக்குவரத்து இடையூறு

தேனி பாரஸ்ட் ரோட்டில் சரக்கு வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் காலை, மாலை நேரங்களில் அந்த ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இங்கு வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதித்துள்ள போதிலும் தடையை மீறி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், தேனி.-

----------------

-உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

Tags:    

மேலும் செய்திகள்