தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு வாசகர்கள் அனுப்பிய புகார்கள் விவரம்.
எரியாத தெருவிளக்குகள்
சடயமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அப்பட்டுவிளை, கிருஷ்ணமங்கலம், செம்மண்விளை, சிவனிகோணம், அக்கரவிளை, கைதமுக்கு போன்ற பகுதிகளில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இருட்டை பயன்படுத்தி சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. எனவே, பழுதடைந்த தெருவிளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவனி சதீஷ், சடயமங்கலம்.
நடவடிக்கை தேவை
திக்கணங்கோட்டில் இருந்து வறுவேல்நகருக்கு ஒரு பாதை செல்கிறது. இந்த பாதையின் குறுக்கே ஒருபக்கம் தண்ணீர் செல்லும் ஓடையும், நடைபாதையும் சேர்ந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் குறுக்கே செல்லும் கேபிள்.டி.வி.யின் ஒயர் மிகவும் தாழ்வாக காணப்படுகிறது. இதனால், பாலம் வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தாழ்வாக காணப்படும் ஒயரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜாண் கில்பர்ட், வறுவேல்நகர்.
சாலை சீரமைக்கப்படுமா?
கோட்டார் சவேரியார் ஆலயம் சந்திப்பில் இருந்து கனரா வங்கி செல்லும் சாலை பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும், சாலையில் வாகனங்கள் செல்லும் போது புழுதி காற்று வீசுவதால் அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்றோ டெகோ சிங் ராஜன், வேதநகர்.
சுகாதார சீர்கேடு
குமாரபுரம் பேரூராட்சி ஆற்றுக்கோணம் மேலத்தெருவிளை பகுதியில் மழை நீர் ஓடையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் வீட்டு கழிவுகளை விடுகிறார்கள். வீட்டுக்கழிவுகள் ெதாடர்ந்து வெளியேறுவதால் மழைநீர் ஓடையில் கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மழைநீர் ஓடையில் கழிவுகள் விடுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.வென்சஸ்லாஸ், ஆற்றுக்கோணம்.
சீரமைக்க வேண்டிய சாலை
செறுகோல் ஊராட்சிக்குட்பட்ட புலிப்பனத்தில் இருந்து ஆற்றூர் வரை சாலை உள்ளது. இந்த சாலை பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழி யாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அகில், குட்டக்குழி.
நிழற்குடை வேண்டும்
அழகியமண்டபத்தில் இருந்து குலசேகரம் செல்லும் வழித்தடத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் பயணம் ெசல்கிறார்கள். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் இங்கு பயணிகளின் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்படும். அழகியமண்டபம் சந்திப்பில் குலசேகரம் செல்லும் பஸ் நிற்கும் பகுதியில் இதுவரை நிழற்குடை அமைக்கவில்லை. இதனால், இங்கு பஸ்சுக்காக காத்துநிற்கும் பொதுமக்கள் மழையிலும், வெயிலிலும் பெரும் அவதிப்படுகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன்கருதி இந்த பகுதியில் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேவசகாயம், அழகியமண்டபம்.