தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-04-02 18:30 GMT

ஆபத்தான மின்கம்பங்களை மாற்ற கோரிக்கை

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கூடலூர் குளத்து பகுதியில் உள்ள 10 மின்கம்பங்களும்,நாட்டார்கோவில்பட்டி பகுதியில் உள்ள 5 மின்கம்பங்களும் பழுதடைந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்து வருகிறது. இதனை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கூடலூர்.

`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு நன்றி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி-தாராபுரம் ரோட்டில் இருந்து எட்டியாக்கவுண்டனூர் கோவிலூர் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வந்தது. இதுகுறித்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது. இதைப்பார்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து, சகதியான இடத்தில் மண் மற்றும் ஜல்லிக்கற்களை கொண்டு சீர் செய்துள்ளனர். இதற்கு செய்தி வெளியிட்டதற்கு `தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், எட்டியாக்கவுண்டனூர்.

குடிநீர் தொட்டி சரி செய்யப்படுமா?

தோகைமலை ஒன்றியம், நெய்தலூர் ஊராட்சி, மேட்டு காட்டில் குடிநீர் தேவைக்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. மேலும், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த தொட்டியில் கீழ் பகுதியில் ஓட்டை விழுந்து தண்ணீர் வெளியே செல்கிறது. இதனால் தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் குடிநீரின்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மேட்டுக்காடு.

கிராம சேவை மையம் பயன்பாட்டுக்கு வருமா?

கரூர் மாவட்டம் திருக்காடுதுறை ஊராட்சி சார்பில் ஆலமரத்துமேடு நூலகம் அருகில் ஊராட்சி சேவை மையம் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த சேவை மையத்திலிருந்து விவசாயிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு சான்றிதழ்களை பெற்று பயனடையும் வகையில் சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் மற்ற ஊர்களில் செயல்படும் சேவை மையத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சேவை மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

பொதுமக்கள், திருக்காடுதுறை.

காய்ந்து வரும் செடிகள்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவில் ஏராளமான செடிகள் நடப்பட்டு அந்த செடிகள் நன்கு வளர்ந்து வந்தது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக இருப்பதன் காரணமாக ரவுண்டானாவில் நடப்பட்டுள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றப்படாததால் தொடர்ந்து காய்ந்து வருகின்றன. முற்றிலும் காய்ந்து போவதற்குள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சமூக ஆர்வலர்கள், வேலாயுதம்பாளையம்.

வாய்க்கால் சுத்தம் செய்யப்படுமா?

கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக மரவாபாளையம் ,சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை ,தோட்டக்குறிச்சி, தளவாபாளையம் வழியாக என்.புதூர் வரை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது இந்த வாய்க்காலை ஆகாய தாமரைகள் மற்றும் பல்வேறு வகையான செடி, கொடிகள் தண்ணீரில் மிதந்து வந்து பாலத்துறை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வாய்க்காலை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.

பொதுமக்கள், பாலத்துறை.

Tags:    

மேலும் செய்திகள்