தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-12-28 19:08 GMT

ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் அடிபம்பு

கரூர் மாவட்டம், சொட்டையூர் பகுதியில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆழ்துளை கிணறு அமைத்து ஆழ்துளை கிணற்றில் குடிநீர் மேலிருக்கும் பம்பை பொருத்தினர். அந்த பம்பிலிருந்து(அடி பம்பு) பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். தார் சாலை ஓரத்திலேயே குடிநீர் மேலிழுக்கும் பம்பு உள்ளது. இதன் காரணமாக தார் சாலை ஓரத்தில் செல்லும் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. எனவே ஆழ்துளைக் கிணற்றில் பொருத்தப்பட்டுள்ள குடிநீர் மேலிழுக்கும் பம்பை அகற்றி விபத்தினை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், சொட்டையூர்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கரூர் மாவட்டம், அரசு காலனியில் உள்ள கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அருகே குப்பைகள் மழைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த குப்பைகள் காற்றில் பரந்து சாலை, குடியிருப்புகள் வரை வந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், அரசுகாலனி.

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம் புன்னம் பகுதியில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளது. அதேபோல் அரசு பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் புன்னம் பகுதிக்கு வந்து செல்கின்றனர். இந்தநிலையில் புன்னம் பகுதியில் உள்ள தார்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்பவர்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், புன்னம்.

சுடுகாட்டில் முளைத்துள்ள செடி-கொடிகள் அகற்றப்படுமா?

கரூர் மாவட்டம் நடையனூரில் இருந்து பேச்சிப்பாறை செல்லும் சாலையின் ஓரத்தில் நடையனூர், சொட்டையூர் சுற்றுவட்டாரபகுதியைச் சேர்ந்தவர்களின் நலன் கருதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சுடுகாடு உருவாக்கப்பட்டது. அதில் எரிப்பதற்கு கான்கிரீட் தளமும், புதைப்பதற்கான இடமும் ஒதுக்கப்பட்டது. இதன் காரணமாக நடையனூர், சொட்டையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இறந்தவர்களின் உடலை எரித்தும், புதைத்தும் வருகின்றனர். இந்நிலையில் சுடுகாட்டில் இருக்கக்கூடிய காங்கிரீட் தளம் பகுதியிலும், இறந்தவர்களின் உடலை புதைக்கும் இடம் முழுவதும் பல்வேறு செடி, கொடிகள் முளைந்து உள்ளது. இதன் காரணமாக இறந்தவர்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடிடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், நடையனூர்.

நாய்கள் தொல்லை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் உள்ள திண்டுக்கல் ரோடு, கரூர் ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இவை அப்பகுதியில் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது கடிக்க பாய்கின்றன. இதனால் இப்பகுதியினர் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரவக்குறிச்சி.

Tags:    

மேலும் செய்திகள்