தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
போக்குவரத்து நெரிசல்
திருச்சி மாவட்டம், முசிறி நகரத்தில் துறையூர் சாலையில் ஏராளமான மரக்கடைகளும், மொத்த வியாபார கடைகளும் உள்ளன. இந்த கடைகளுக்கு சரக்குகளை இறக்க வரும் லாரிகள் பள்ளி நேரமான காலை 7 மணி முதல் 10 மணி வரை துறையூர் சாலை, தேசிய நெடுஞ்சாலைகளில் சரக்கு வாகனங்களை வரிசையாக நிறுத்திக்கொண்டு சரக்குகளை இறக்குவதால் பள்ளி செல்லும் வாகனங்கள், ஆட்டோ, பஸ் போன்றவைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது. தினமும் இதனால் வேலைக்கு செல்பவர்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சரக்குகளை இறக்கும் நேரத்தை மாலை அல்லது இரவு நேரங்களுக்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், துறையூர்.
பன்றிகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், சிங்களாந்தபுரம் ஊராட்சிக்குட்பட்ட தங்கநகர் குடியிருப்பு பகுதியானது, தினத்தோறும் சுமார் 100 பன்றிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளது. குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் குப்பைகள் சாலைக்கு தள்ளப்பட்டு, சுகாதாரக்கேடு உருவாகிறது. சாலைகளின் ஓரத்தில் தேங்கியுள்ள நீரில், படுத்து எழுந்து வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் பலனில்லை. எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், தங்கநகர்.
தேங்கி நிற்கும் தண்ணீரால் நோய் பரவும் அபாயம்
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வெளியனூர் பஞ்சாயத்து கல்லடிப்பட்டி கிராமத்தில் பள்ளிகூடம் தண்ணீர் தொட்டி அருகே கடந்த 30 நாட்களாக நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கல்லடிப்பட்டி.
சாலை வசதி வேண்டும்
திருச்சி காட்டூர் அண்ணா சாலை குறுக்கு தெருக்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாலை, வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால் மழைபெய்யும்போது மழைநீர் செல்ல வழியின் மண் சாலையில் தேங்குவதுடன், சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மாணவிகள், பெண்கள், முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ெபாதுமக்கள், திருச்சி
குரங்குகள் தொல்லை
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மெயின் ரோட்டில் அமைந்துள்ள 13 மாடி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டுள்ள மளிகை, உணவு பொருட்களை எடுத்துச்செல்வதுடன், குழந்தைகளை கடிக்க வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தியாகராஜன், எடமலைப்பட்டி புதூர்