தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கால்நடை மருத்துவமனை அமைக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே மேலத்தானியம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான சூரப்பட்டி, வடக்கிப்பட்டி, எம்.உசிலம்பட்டி, ஆவாம்பட்டி, வெள்ளையக்கவுண்டம்பட்டி, அம்மாபட்டி, பில்லனிவயல், முள்ளிப்பட்டி, கீழத்தானியம், இடையம்பட்டி உட்பட 15-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் அதிக அளவில் ஆடு, மாடு, கோழி, நாய்கள் வளர்த்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாடு, ஆடுகளை சிகிச்சைக்காக காரையூர் அல்லது சடையம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கால்நடை வளர்ப்பவர்களின் கஷ்டத்தை போக்கவும், கால்நடைகளை பாதுகாக்கவும் மேலத்தானியத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மேலத்தானியம், புதுக்கோட்டை.
பஸ் வசதி இன்றி மக்கள் அவதி
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, காரையூர் சுற்றுவட்டார பகுதியான மேலத்தானியம், கீழத்தானியம், முள்ளிப்பட்டி, ஆலம்பட்டி, அரசமலை, நல்லூர், மறவாமதுரை, ஒலியமங்கலம், கூடலூர், கொன்னையம்பட்டி, இடையாத்தூர், எம்.உசிலம்பட்டி, காரையூர் என பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அன்னவாசல் போலீஸ் நிலையம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்ல பஸ் வசதி இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதேபோல மேற்கண்ட பகுதிகளில் இருந்து இலுப்பூர், புதுக்கோட்டை கல்லூரிகளுக்கு செல்ல மாணவ- மாணவிகள் இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர். எனவே காரையூர், சடையம்பட்டி, ஒலியமங்கலம், மேலத்தானியம், இலுப்பூர், அன்னவாசல் வழியாக புதுக்கோட்டைக்கு அரசு பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காரையூர், புதுக்கோட்டை.