தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2023-08-20 21:28 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

நெல்லை மாவட்டம் முக்கூடல் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி பயன்பாடற்ற நிலையில் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் போதிய தண்ணீர் வசதியின்றி சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-ஆதிமூலம், முக்கூடல்.

அடிப்படை வசதிகள் தேவை

களக்காடு தெற்கு தெரு, ஆற்றங்கரை தெருக்களில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு போதிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

-மணி, களக்காடு.

குண்டும், குழியுமான சாலை

நெல்லை மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் சாலையில் குழி தோண்டி குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. பின்னர் சாலையை சீரமைக்காததால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-காஜா, மேலப்பாளையம்.

வழிகாட்டி பலகை வேண்டும்

ராதாபுரம்- நக்கனேரி மெயின் ரோட்டில் பரமேஸ்வரபுரம் சாலை இணையும் இடத்தில் வழிகாட்டி பலகை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வெளியூர் பயணிகள் வழிதெரியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே அங்கு வழிகாட்டி பலகை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

பஸ் நிறுத்தம் வருமா?

பாளையங்கோட்டை சீனிவாசகம் நகரில் உள்ள அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதியில் இருந்து வரும் பயணிகள், கே.டி.சி. நகர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி நெடுந்தூரம் நடந்து வர வேண்டி உள்ளது. எனவே பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சீனிவாசகம் நகரில் பஸ் நிறுத்தம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-குருசாமி, வி.எம்.சத்திரம்.

குடிநீர் வசதி அவசியம்

தெற்கு வீரவநல்லூர் பாரதிநகர் பொத்தை பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய்கள் பதிப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பல மாதங்களாக பணிகள் நிறைவு பெறாததால், பொதுமக்கள் போதிய தண்ணீர் கிடைக்கப்பெறாமல் அவதிப்படுகின்றனர். எனவே பணிகளை விரைந்து நிறைவேற்றி, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-கண்ணன், பொத்தை.

சுகாதாரக்கேடு

திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் வழியில் பாதாள சாக்கடை நிரம்பி சாலையில் கழிவுநீர்  தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

-பாலசுப்பிரமணியன், தூத்துக்குடி.

* தூத்துக்குடி கோரம்பள்ளம் மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகில் குப்பைக்கூளமாக காட்சியளிக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-பாலசுப்பிரணியன், கோரம்பள்ளம்.

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து வள்ளிவிளை துலுக்கன்குளத்திற்கு அருகில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் வீணாவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே குழாய் உடைப்புகளை சரிசெய்து, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுகிறேன்.

-வெங்கடேஷ், வள்ளிவிைள.

குளத்தை தூர்வார வேண்டும்

சாத்தான்குளம் தாலுகா புத்தன்தருவை குளம் தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் அங்கு சீமைக்கருவேல மரங்கள், புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. எனவே சீமைக்கருவேல மரங்கள், புதர் செடிகளை அகற்றி, குளத்தை தூர்வாருவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-குமார், புத்தன்தருவை.

குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு மூடி தேவை

கோவில்பட்டி கடலைக்கார தெரு, புதுரோடு முகப்பு பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலையை சரிவர சீரமைக்கவில்லை. மேலும் குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கும் கான்கிரீட் மூடி அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சாலையை சீரமைத்து, குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு கான்கிரீட் மூடி அமைக்க வேண்டுகிறேன்.

-பாலமுருகன், கோவில்பட்டி.

சேதமடைந்த போக்குவரத்து சிக்னல் கம்பம்

தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சி சிலுவைமுக்கு பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் சிக்னல் கம்பம் அசைந்தாடுவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-எஸ்ரா டேனியல், இலத்தூர்.

குடிநீர் தட்டுப்பாடு

சங்கரன்கோவில் அருகே களப்பாளங்குளம் பஞ்சாயத்து நேதாஜி நகர், நெசவாளர் காலனி பகுதியில் கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே அங்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-முப்பிடாதி, களப்பாளங்குளம்.

சுகாதாரக்கேடு

கடையநல்லூர் தாலுகா சாம்பவர்வடகரை பேரூராட்சி சின்னவைரவன் கீழத்தெருவில் வாறுகால் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் சாலையும் சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-குமார், சாம்பவர்வடகரை.

* சங்கரன்கோவில் நகராட்சி புதுமனை 5, 6-வது தெருக்களில் வாறுகாலில் அடைப்பு உள்ளது. இதனால் வாறுகாலில் கழிவுநீர் தேங்கி, சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகால் அடைப்பை அகற்றி, கழிவுநீர் முைறயாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-முருகையா, சங்கரன்கோவில்.

சாலையின் நடுவில் ராட்சத பள்ளம்

வாசுதேவநல்லூர் அருகே வெள்ளானைக்கோட்டை பள்ளிவாசலுக்கு தெற்கே உள்ள சாலையின் நடுவில் ராட்சத பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

-முத்துமனோ, வெள்ளானைக்கோட்டை.

Tags:    

மேலும் செய்திகள்