தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-08-16 18:20 GMT

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி கிராப்பட்டி அன்பு நகர் 7-வது தெருவில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் வகையில், சாலை ஓரத்தில் மின் கம்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது மிகவும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் பெருமளவில் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அன்பு நகர்

குடிநீர் பற்றாக்குறை

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பச்சபெருமாள்பட்டி ஊராட்சி 11-வது வார்டு அண்ணா நகரில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 3 மாதங்களாக முறையான குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அடிப்படை தேவைகளுக்காக அருகில் உள்ள பகுதிகளில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அண்ணா நகர்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு நன்றி

சமயபுரம் போலீஸ் நிலைய வரவேற்பாளர் மேஜை முன்பு போடப்பட்டிருந்த பெஞ்ச் சில நாட்களாக அகற்றப்பட்டுள்ளது. இதனால் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி பிரசுரம் செய்யப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் உத்தரவின்படி போலீசார் சமயபுரம் போலீஸ் நிலையம் முன்பு பெஞ்ச் மற்றும் பிளாஸ்டிக் நாற்காலிகளை போட்டுள்ளனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த போலீஸ் அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், சமயபுரம்

இதேபோல் திருச்சி உறையூர்- குழுமணி சாலை வழியாக தினமும் ஏராளமான பஸ்கள், பள்ளி வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இந்த பிரதான சாலையில் காமாட்சியம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் சாலையின் வளைவு பகுதியில், திடீரென சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், உறையூர்சேறும், சகதியுமான சாலை

திருச்சி மாநகராட்சி கோவர்தன் கார்டன் கே.கே.நகர் பகுதியில் தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக இப்பகுதியில் உள்ள மண் சாலையானது சேறும், சகதியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கே.கே.நகர்

Tags:    

மேலும் செய்திகள்