'தினத்தந்தி' புகார் பெட்டி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-07-09 18:45 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வேகத்தடை வேண்டும்

பாளையங்கோட்டை பொதிகைநகர் மெயின் ரோட்டில் ஜெபா கார்டன் அருகில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தின் முன்பு வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளிக்கூடம் முன்பு வேகத்தடை அமைக்க வேண்டுகிறேன்.

- செய்யது சலாம், பாளையங்கோட்டை.

தெருநாய்கள் தொல்லை

முக்கூடல் பேரூராட்சி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்லும் பொதுமக்களை விரட்டி கடிக்கின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-இசக்கிராஜா, முக்கூடல்.

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

மூலைக்கரைப்பட்டி அருகே கடம்பன்குளம் கிராமத்தின் வடக்கு பகுதியில் இருந்து மூலைக்கரைப்பட்டி செல்லும் சாலையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து, சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-மணிகண்டன், கடம்பன்குளம்.

சேறும் சகதியுமான சாலை

முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழை பெய்யும்போது, சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதி அடைகின்றனர். எனவே அங்கு புதிய சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

-ஆதிமூலம், முக்கூடல்.

வழிகாட்டி பலகை தேவை

ராதாபுரம்- வள்ளியூர் மெயின் ரோட்டில் மருதப்பபுரம் சந்திப்பில் இருந்து தெற்கு நோக்கி பெத்தரெங்கபுரத்துக்கு சாலை பிரிந்து செல்கிறது. ஆனால் அந்த இடத்தில் வழிகாட்டி பலகை இல்லாததால் வெளியூர் பயணிகள் வழிதெரியாமல் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு வழிகாட்டி பலகை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

பஸ் வசதி வேண்டும்

நெல்லை டவுன் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் சேரன்மாதேவி, காருகுறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பணிபுரிகிறார்கள். தினமும் காலையில் வேலைக்கு வரும் இவர்கள், இரவு 9.15 மணியளவில் வீடுகளுக்கு திரும்பி செல்லும் வகையில் நெல்லை டவுன் வழியாக அரசு போதிய பஸ்களை இயக்க வேண்டுகிறேன்.

-இசை கார்த்திக், சேரன்மாதேவி.

புகாருக்கு உடனடி தீர்வு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ெரயில் நிலையம் எதிரில் காந்தாரி அம்மன் கோவில் நுழைவுவாயில் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுவதாக பாலமுருகன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும் நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்

குலசேகரன்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. எனவே சாலையை ஆக்கிரமித்த முட்செடிகளை அகற்ற வேண்டுகிறேன்.

-இசக்கிமுத்து, குலசேகரன்பட்டினம்.

ரேஷன் கடைக்கு கட்டிடம் கட்டப்படுமா?

கயத்தாறு தாலுகா குருவிநத்தம் பஞ்சாயத்து இலந்தப்பட்டியில் பகுதிநேர ரேஷன் கடை தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே அங்கு ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டி, நிரந்தர ரேஷன் கடையாக அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-மாயகிருஷ்ணன், இலந்தப்பட்டி.

இருக்கைகள் இல்லாத நிழற்கூடம்

சாத்தான்குளம் அருகே நொச்சிகுளம் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தில் இரும்பாலான இருக்கைகள் சேதமடைந்த நிலையில் இருந்தன. நாளடைவில் அவை மாயமாகி விட்டன. இதனால் பயணிகள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்து நிற்கும் அவல நிலை உள்ளது. எனவே அங்கு கான்கிரீட்டாலான இருக்கைகள் அமைக்க வேண்டுகிறேன்.

-அன்றோ ஜெஸ்வந்த், சாத்தான்குளம்.

சுகாதாரக்கேடு

நாசரேத் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள பொது கழிப்பிடம் போதிய பராமரிப்பு இன்றி சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. இதனால் மிகுந்த துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பொது கழிப்பறையை தூய்மையாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-மூர்த்தி, நாசரேத்.

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டி ரெயில்வே கேட் அருகில் சாலையோரத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்வதாக திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

காட்சிப்பொருளான சுகாதார வளாகம்

செங்கோட்டை தாலுகா அலுவலக நுழைவுவாயில் பகுதியில் நவீன பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. ஆனால் அது எப்போதும் பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே காட்சிப்பொருளான சுகாதார வளாகத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-ராஜீவ்காந்தி, செங்கோட்டை.

வேகத்தடை தேவை

வாசுதேவநல்லூர் யூனியன் முள்ளிக்குளம் பஞ்சாயத்து சங்கரன்கோவில்-புளியங்குடி மெயின் ரோட்டில் உள்ள இந்திரா காலனியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அங்கு வேகத்தடை, எச்சரிக்கை பலகைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அன்பரசன், முள்ளிக்குளம்.

குண்டும் குழியுமான சாலை

கீழப்பாவூர் யூனியன் சிவநாடானூர் பஞ்சாயத்து திருமலாபுரத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-மாரிமுத்து, திருமலாபுரம்.

ஒளிராத தெருவிளக்குகள்

கடையம் யூனியன் மேல ஆம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூரில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

Tags:    

மேலும் செய்திகள்