'பிப்பர்ஜாய்' புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
அரபிக்கடலில் உருவான ‘பிப்பர்ஜாய்’ புயல், தீவிர புயலாக வலுவடைந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை,
தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் நிலவி வருகிறது. இந்த நிலையில் அதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது நெருங்கி வருகிறது. அதற்கேற்றாற்போல், அரபிக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் வலுப்பெற்றது.
இந்த புயலுக்கு 'பிப்பர்ஜாய்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பெயர் சூட்டியிருக்கிறது. இந்த பெயரை வங்காளதேசம் பரிந்துரைத்து இருக்கிறது. 'பிப்பர்ஜாய்' என்றால் 'பேரழிவு' என்பது பொருள் ஆகும்.
புயல், தீவிர புயலாகவும் வலுவடைந்து, அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் தீவிர புயலாகவும் வலுவடையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தென்மேற்கு பருவமழை
இதன் காரணமாக கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு தொடர்ந்து மழை இருக்கும்பட்சத்திலும், மேற்கு திசை காற்று உள்ளே நுழையும் பட்சத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியதற்கான அறிவிப்பை ஆய்வு மையம் வெளியிடும்.
இந்த புயலாலும், தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தாலும் தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழை
அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதனைத்தொடர்ந்து மேலும் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் சில இடங்களில் வெப்பத்தின் தாக்கமும் இருக்கும் எனவும், தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், ஜமுனாமரத்தூர் 5 செ.மீ., மதுரை வடக்கு, மதுரை விமான நிலையம், மூங்கில்துறைப்பட்டு, பந்தலூர் தாலுகா அலுவலகம், மாமல்லபுரம் தலா 3 செ.மீ., அயனாவரம் தாலுகா அலுவலகம், திண்டிவனம், புதுச்சேரி, ஆண்டிப்பட்டி, மணலூர்ப்பேட்டை, அவலாஞ்சி தலா 2 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.