சென்னையை புரட்டி எடுத்த மாண்டஸ் புயல்..!
சென்னையில் ஒருசில பகுதிகளில் நேற்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.;
சென்னை,
வங்கக்கடலில் கடந்த 5-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் நேற்று முன் தினம் அதிகாலை புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது.
பின்னர், நேற்று முன் தினம் இரவு தீவிர புயலாக வலுப்பெற்று வங்கக்கடலில் நேற்று காலை வரை நிலைகொண்டது. இந்த தீவிர புயல் காரணமாக தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்கள் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்தது.
இந்நிலையில், சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மாண்டஸ் புயல் கரையை கடந்தது.
புயல் முழுமையாக கரையை கடந்த நிலையில் இன்று காலை மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க உள்ளது. அதன் பின்னர், காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மதியம் உள்மாவட்டங்கள் வழியாக கடந்து செல்ல உள்ளது.
புயல் கரையை கடந்த போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. கனமழையுடன் சூறைக்காற்றும் வீசியது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயல் காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்ததால் பல பகுதிகளில் இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.