செங்கல்பட்டு மாவட்டத்தில் புயலை எதிர்கொள்ள 33 குழுக்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் புயலை எதிர்கொள்ள 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
நிவாரண முகாம்கள்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாண்டஸ் புயல் உருவாகி உள்ளதை தொடர்ந்து மாவட்டத்தில் இன்று(வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) பலத்த புயல் காற்று மற்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய 390 பகுதிகள் கண்டறியப்பட்டு உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை தங்க வைக்க 290 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.
33 குழுக்கள்
மேலும் 12 துணை ஆட்சியர் நிலையிலான மண்டல அலுவலர்கள் தலைமையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து 33 குழுக்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாண்டஸ் புயலை எதிர்கொள்ள 134 மரம் அறுக்கும் எந்திரம், 80 பொக்லைன் எந்திரங்கள், 106 ஜெனரேட்டர்கள், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மின்சாரத் துறை, மீன்வளத்துறை, வேளாண் துறை மற்றும் காவல்துறை, தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட அனைத்து துறைகளும் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.
புகார்களை தெரிவிக்க
மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் வசித்து வரும் 6,023 குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர உதவிகள் மற்றும் இடர்பாடுகள் குறித்த புகார்களை எளிதில் உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் அவசர கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பேரிடர் தொடர்பான விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய
தொலைபேசி எண் 044-27427412.,
044-274274141 கைபேசி வாட்ஸ்அப் எண்- ௯௪௪௪௨௭௨௩௪௫