பெண்களின் கைப்பையை அறுத்து பணம் திருட்டு
பெண்களின் கைப்பையை அறுத்து பணம் திருட்டு;
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில் ஓடும் பஸ்சில் பெண்களின் கைப்பையை அறுத்து பணத்தை திருடிய பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருட்டு
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சிவக்கொல்லைப்பகுதியை சேர்ந்த இளவரசன் மனைவி கலைச்செல்வி (வயது 34). அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மனைவி கார்த்திகா (30). சம்பவத்தன்று இருவரும் பட்டுக்கோட்டையில் இருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். லட்சத்தோப்பு பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி வேகமாக சென்றுவிட்டார். மீண்டும் பஸ் கிளம்பும்போது கலைச்செல்வி, கார்த்திகா ஆகியோர் தாங்கள் வைத்திருந்த பையை பார்த்தபோது பை அறுக்கப்பட்டு அதில் வைத்திருந்த பர்ஸ், பணம், ஆதார் கார்டு ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.
விசாரணை
அதனை தொடர்ந்து பஸ்சில் இருந்து இருவரும் இறங்கினர். அப்போது பஸ்சில் அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்த பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பொதுமக்கள் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண், கலைச்செல்வி வைத்திருந்த பையில் இருந்து திருடிய ரூ. 6 ஆயிரம், பர்ஸ், ஆதார் கார்டு உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை அழைத்து சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில் அந்த பெண் கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னசேலம் சாலைப் பகுதியில் வசித்து வரும் முத்து மனைவி கலைச்செல்வி (49) என்பது தெரியவந்தது. அவர் மீது கும்பகோணம் உள்பட பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்கு உள்ளதும், அவர் கைது செய்யப்படும் இடங்களில் வெவ்வேறு பெயர்கள் மற்றும் முகவரிகளை கொடுப்பது வழக்கமாக இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வியை கைது செய்து பட்டுக்கோட்டை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். பின்னர் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.ஓடும் பஸ்சில் பெண்களின் கைப்பையை அறுத்து பணம் திருடிய பெண்ணை பொதுமக்கள் போலீசில் பிடித்து ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.