மது அருந்த பணம் தரமறுத்த மனைவிக்கு அரிவாள் வெட்டு
பிலிக்கல்பாளையம் அருகே மது அருந்த பணம் தரமறுத்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.;
பரமத்திவேலூர்
கூலித்தொழிலாளி
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 45). இவரது மனைவி செல்வி (35). இவர்கள் தற்போது நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள வேட்டுவங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி மாதேஷ் தனது செல்போனை அடகு வைத்து மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மீண்டும் மது அருந்த மனைவி செல்வியிடம் அவர் பணம் கேட்டுள்ளார்.
அப்போது செல்வி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் கணவன் மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாதேஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி செல்வியை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் செல்வி பலத்த காயமடைந்தார். அதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் மூலம் செல்வியை மீட்டு சிகிச்சைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவர் கைது
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு செல்விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் புகார் செய்தனர்.
இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்குப்பதிவு செய்து மனைவியை அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட மாதேஷை கைது செய்தனர். இதையடுத்து பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் நீதிபதியின் உத்தரவின் பேரில் பரமத்தியில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.