சுங்க கட்டண உயர்வால் சாதாரண மக்களுக்கு பாதிப்பு-கார்த்திக் சிதம்பரம் எம்.பி. பேட்டி
சுங்க கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி அளித்தார்.;
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. கார்த்தி சிதம்பரம் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரை கோர்ட்டு தீர்மானிக்க முடியாது. அந்த கட்சியின் உறுப்பினர்களே முடிவு செய்ய முடியும். மக்கள் எளிதில் அணுகக்கூடிய முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். அவர் பாராட்டப்பட வேண்டியவர்.
மத்தியில் ஆளுகிற பா.ஜ.க., பொதுமக்களின் சிரமத்தை என்றுமே எண்ணி பார்ப்பது இல்லை. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, கொரோனா ஊரடங்கில் நிதி வழங்காமை, பெட்ரோல் மீது வரி விதிப்பு என அனைத்திலும் அவர்கள் என்ன நினைத்தார்களோ அதனையே செய்கிறார்கள். தற்போது சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும். சாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.