வறட்சியை தாங்கி வளரும் களாக்காய் சாகுபடி

ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வறட்சியை தாங்கி வளரும் களாக்காய் சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளனர்.

Update: 2022-08-24 18:07 GMT

ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வறட்சியை தாங்கி வளரும் களாக்காய் சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளனர்.

களாக்காய் சாகுபடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் மற்றும் பருத்தி, மிளகாய் சாகுபடிதான் பிரதானமாக இருந்து வருகிறது. உப்புசத்து மிக்க ராமநாதபுரம் மாவட்ட மண்ணில் வறட்சி காரணமாக பழங்கள் சாகுபடி என்பது அரிதாக உள்ளது. இந்நிலையை மாற்றும் வகையில் ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வறட்சியை தாங்கி வளரும் வகையில் களாக்காய் சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளனர்.

இதற்காக சுமார் 60-க்கும் மேற்பட்ட களாக்காய் செடிகளை கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக வளர்த்து வந்தனர். இந்த களாக்காய் செடிகளில் காய்கள் காத்து குலுங்கி நிற்கின்றன. இவற்றை பறித்து பக்குவம் செய்யும் பணியில் வேளாண் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நடவடிக்கை

இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி உதவி பேராசிரியர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-

திட்ட ஒருங்கிணைப்பாளர் ராகவன் ஆலோசனையின்பேரில் இந்த களாக்காய் செடிகளை சோதனை முறையில் வளர்த்து வந்தோம். ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இந்த காய்கள் காய்க்கும் தன்மை உடையது. களாக்காய்களை சாப்பிட்டால் உடல் சூட்டை தணிக்கும் சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சினைகள் கட்டுப்படும். செடிகளில் முள் இருப்பதால் இவற்றை வீடுகளை சுற்றி வளர்த்து வந்தால் வேலிச்செடியாகவும் பயன் கிடைக்கும். தோட்டம் வயல்வெளியில் வேலிச்செடியாக வளர்த்து அதிக லாபம் பெறலாம். ஒரு செடிக்கு ஒரு பருவத்தில் சுமார் 2 கிலோ வரை காய்கள் கிடைக்கும்.

இந்த களாக்காய்களை ஊறுகாய் போன்றவை செய்தோ சாதாரணமாகவோ சாப்பிட்டு பயன்அடையலாம். இந்த செடிகளை வளர்க்க விரும்புபவர்கள் வேளாண் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொண்டால் குறைந்த விலையில் வாங்கித்தர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்