கடலூர் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

கடலூர் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. அப்போது அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-10-27 00:30 IST

கடலூர் மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலுவலக சாலை, கிளை சிறைச்சாலை ரோடு, ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகம் எதிரே உள்ள சாலை, சில்வர் பீச் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சியில் அனுமதி பெறப்பட்ட கடைகளை விட, ஆக்கிரமிப்பு கடைகள் அதிகமாக இருந்தது. டீ கடைகள், டிபன் கடை, பெட்டிக்கடை, ஜெராக்ஸ் கடை என 100-க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்தன.

இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் கடைகளை காலி செய்யவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின்பேரில் செயற்பொறியாளர்கள் கலைவாணி (திட்டம்), குருசாமி மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் ஆக்கிரமிப்புகளை கடைகளை அகற்றுவதற்காக பொக்லைன் எந்திரங்கள், டிராக்டர்களுடன் பழைய கலெக்டர் அலுவலக சாலை, நீதிமன்றம் எதிரே உள்ள சாலைக்கு சென்றனர்.

வாக்குவாதம்

பின்னர் அங்கிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். சிலர் தாங்களே முன் வந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். அப்போது வியாபாரிகள் ஒன்று சேர்ந்து அங்கிருந்த மாநகராட்சி அதிகாரிகளிடம், நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு கடை வைத்திருக்கிறோம். எங்களை திடீரென காலி செய்ய சொன்னால் எங்கே போவோம். ஆகவே கடைகளை காலி செய்யக்கூடாது என்று வாக்குவாதம் செய்தனர். செயற்பொறியாளர் கலைவாணி காரை சூழ்ந்து நின்றும் அவர்கள் கோரிக்கை பற்றி பேசினர்.

தகவல் அறிந்ததும் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வம் சம்பவ இடத்திற்கு வந்தார். அவரை வியாபாரிகள் சூழ்ந்து கொண்டு, தங்களின் கடைகளை காலி செய்யக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற அவர், வியாபாரிகளுடன் அங்கிருந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். முதலில் மறுத்த அதிகாரிகள் பிறகு, அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

போலீஸ் குவிப்பு

இருப்பினும் பெரும்பாலான கடைக்காரர்கள் தாங்களே முன் வந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிக்கொண்டனர். இந்த சம்பவத்தையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

--

Tags:    

மேலும் செய்திகள்