கடலூரில் இஞ்சி, பீன்ஸ் விலை கிடு, கிடு உயர்வு
வரத்து குறைவு எதிரொலியாக கடலூரில் இஞ்சி, பீன்ஸ் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது.
ஆந்திரா, கேரளா, மராட்டியம் போன்ற அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்து காணப்படுவதால் மளிகை பொருட்களின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மளிகை பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து விட்டது. துவரம் பருப்பு, சீரகம், மிளகு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. இதனால் இல்லத்தரசிகள் சோகத்தில் உள்ளனர்.
இதேபோல் பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு வரும் இஞ்சி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்து விட்டதால், அதன் விலையும் உயர்ந்து விட்டது. கடந்த மாதம் ஒரு கிலோ இஞ்சி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கடந்த சில வாரங்களாக ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கிலோவில் இஞ்சியை வாங்கிய இல்லத்தரசிகள் தற்போது, கிராம் அளவில் வாங்கி வருகின்றனர்.
கிள்ளி போடுகின்றனர்
சில்லரைக்கு பதிலாக இஞ்சி தாருங்கள் என்று கேட்டு வாங்கினர். தற்போது அதற்கும் வேட்டு வைத்து விட்டது இந்த விலை உயர்வு. தற்போது 100 கிராம் இஞ்சி ரூ.20-க்கு வாங்கி வருகின்றனர். அசைவம் சமைப்பவர்கள் கட்டாயம் இஞ்சியை பயன்படுத்துவது வழக்கம். அவர்கள் சமையலில் முன்பு ஓரளவு அள்ளி போட்ட இஞ்சியை தற்போது கிள்ளி போடும் அளவுக்கு வந்து விட்டனர்.
இதற்கு போட்டியாக பீன்ஸ் விலையும் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் ஒரு கிலோ தற்போது ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது இல்லத் தரசிகளுக்கு மேலும் அதிர்ச்சியை அளித்து வருகிறது.
வரத்து குறைவு
இது பற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவர் கூறுகையில், இஞ்சி விலை கடந்த ஒரு மாதமாக உயர்ந்து தான் இருக்கிறது. பெங்களூருவில் விளைச்சல் இல்லாததால் வரத்து குறைந்து விட்டது. இதனால் இருப்பில் இருந்த பழைய இஞ்சி தான் விற்பனைக்கு வருகிறது. அது தான் இந்த விலை உயர்வுக்கு காரணம். அதேபோல் பீன்ஸ் விளைச்சலும் குறைவாக இருப்பதால் வரத்தும் குறைவாக உள்ளது. இந்த விலை உயர்வுக்கும் அது தான் காரணம். முன்பு மூட்டையாக இஞ்சி, பீன்ஸ் வாங்கி விற்பனை செய்வோம். இப்போது 15, 10 கிலோ என கிலோவில் வாங்கி கடையில் விற்பனை செய்கிறோம் என்றார்.