கூடலூர் யானைகள் வழித்தடம்; திட்ட அறிக்கையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழக அரசு வெளியிட்டுள்ள கூடலூர் யானை வழித்தட திட்ட மாதிரி அறிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.;
சென்னை,
கூடலூர் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாகக் காட்டி அவர்களை வெளியேற்ற யானை வழித்தடத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த முயல்வது வெட்கக்கேடானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"நீலகிரி மாவட்டம், கூடலூரில் வனத்துறை மூலம் தமிழக அரசு அவசரகதியில் வெளியிட்டுள்ள யானை வழித்தட பாதுகாப்பு மாதிரி வரைவு அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. யானைகளின் உண்மையான வழித்தடத்தை அறியாமல், கருத்துக்கேட்புக் கூட்டங்களும் நடத்தாமல், மக்களை வெளியேற்றும் ஒற்றை நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ள வரைவு அறிக்கை வன்மையான கண்டனத்துக்குரியது.
யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதையோ, அதன் வாழ்விடத்தைப் பாதுகாப்பதிலோ எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், யானைகள் வாழுமிடம் மற்றும் வழித்தடம் (வலசை) எதுவென்பதே அறியாமல் தமிழ்நாடு வனத்துறை கூடலூர் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாகக் காட்டி அவர்களை வெளியேற்ற யானை வழித்தடத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த முயல்வது வெட்கக்கேடானது.
யானை வழித்தடம் (வலசை) என்பது அறிவியல் அடிப்படையில் சில காலம் யானைகளைப் பின் தொடர்ந்து, அதன் பாதையைத் தொடர்ச்சியாகக் கவனித்தறிந்து, உண்மையாக வரைவதாகும். ஆனால், வனத்துறையினர் கோடுகள் வரைந்து, அதனை யானையின் வழித்தடமாக அறிவித்து, அதில் யானைகளை நடக்கவைக்க நினைப்பது இயற்கைக்கு முரணானது என்பதை தமிழக அரசு உணராதது ஏன்? அரசு வெளியிட்டுள்ள புதிய யானை வழித்தட மாதிரி வரைவின்படி, கூடலூர் தொகுதியிலுள்ள 46 கிராமங்களிலுள்ள ஏறத்தாழ 37,856 வீடுகள் முழுமையாகப் பாதிக்கப்படுகிறது.
முழுமையாக ஆங்கிலத்தில் இருந்த மாதிரி வரைவு அறிக்கையைப் பாமர மக்கள் புரிந்துகொள்ள முடியாத நிலையில், வரைவு அறிக்கை குறித்து மக்களிடம் நேரடி கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தாமல், மின்னஞ்சல் மூலமாகக் கருத்து தெரிவிக்க (29-4-2024 முதல் 07-05-2024 வரை மட்டும்) குறுகிய கால அவகாசம் மட்டுமே வழங்கியது ஏன்? இதிலிருந்தே அரசின் உள்நோக்கம் தெளிவாகிறது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் நோக்கத்தோடும், கூடலூர் பகுதிகளில் பன்னெடுங்காலமாய் வசித்து வரும் மக்களின் நில உரிமையைப் பறிக்கும் நோக்கத்தோடும், அவர்களின் வாழ்விடங்கள் யானைகளின் வழித்தடத்துக்கு இடையூறாக இருப்பதுபோல ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குவது பெருங்கொடுமையாகும்.
யானைகளின் வலசை பாதைகளுக்கு உண்மையான இடையூறாக இருக்கும் சுற்றுலா விடுதிகள், தனியார் சொகுசு மாளிகைகள், வணிக நிறுவனங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் திறனற்ற தி.மு.க. அரசு, கூடலூர் மக்களின் வசிப்பிடங்களைக் குறிவைத்து அகற்றத்துடிப்பது சிறிதும் நியாயமற்றதாகும். வனத்துறையின் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல 2008-ம் ஆண்டுக்குப் பிறகுதான் யானை தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் நிலை அதிகரித்துள்ளது.
அதன்படி பார்த்தால் நூற்றாண்டுகள் கடந்து இயங்கி வரும் தேயிலைத் தோட்டங்களோ, தேயிலைத் தொழிலாளர் வசிப்பிடங்களோ யானை வழித்தடத்துக்குக் குறுக்கீடு இல்லை என்பது தெளிவாகிறது. இதன் மூலம் வனச்சட்டங்கள் என்ற பெயரில் கூடலூர் மக்களை வெளியேற்ற ஆளும் அரசுகள் செய்யும் சூழ்ச்சிகளின் தொடர்ச்சியே புதிதாக வெளியிடப்பட்டுள்ள யானை வழித்தட திட்ட மாதிரி அறிக்கையும் என்பது உறுதியாகிறது.
எனவே, தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள கூடலூர் யானை வழித்தட திட்ட மாதிரி அறிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டுமெனவும், வல்லுநர்கள் உதவியுடன் யானை வழித்தடங்களை அறிவியல் அடிப்படையில் ஆய்ந்தறிந்து, கூடலூர் பகுதி மக்களிடம் நேரடியாகக் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தி, அதன் மூலம் உண்மையான யானை வழித்தடங்களைக் கண்டறிந்து புதிய திட்ட அறிக்கை தயாரித்து வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.