கடலூர் தி.மு.க. எம்.பி. உள்பட 6 பேர் கோர்ட்டில் ஆஜர்
முந்திரி தொழிலாளி கொலை வழக்கு: கடலூர் தி.மு.க. எம்.பி. உள்பட 6 பேர் கோர்ட்டில் ஆஜர் வழக்கு விசாரணை 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு;
கடலூர்
கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளி கோவிந்தராசு என்பவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ரமேஷ் எம்.பி.யின் உதவியாளர் நடராஜன் (வயது 31), முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல் (49), தொழிலாளர்கள் அல்லாபிச்சை (53), சுந்தர் என்கிற சுந்தர்ராஜ் (31), வினோத் (31) ஆகியோரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். மேலும் ரமேஷ் எம்.பி. கோர்ட்டில் சரண் அடைந்தார். அதன் பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், கோவிந்தராசு கொலை வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை மாதம் ரமேஷ் எம்.பி. உள்ளிட்ட 6 பேர் மீதும் 300 பக்க குற்றப்பத்திரிகையை கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து இவ்வழக்கு தொடர்பான விசாரணை கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், சுந்தர்ராஜ் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கும்படி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இதற்கிடையே இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரமேஷ் எம்.பி. உள்ளிட்ட 6 பேரும் ஆஜர் ஆகினர். ஆனால் அரசு தரப்பில் சாட்சிகள் யாரையும் ஆஜர்படுத்தவில்லை. இதனால் இவ்வழக்கு விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், அன்றைய தினம் அரசு தரப்பில் சாட்சிகளை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஜவகர் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் சிவகாமி ஆஜராகி வாதாடினார்.