ஊர்க்காவல் படை, கடலோர பாதுகாப்பு குழும பணிக்கு விண்ணப்பிக்கலாம்கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
ஊர்க்காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தெரிவித்துள்ளார்.;
ஆட்கள் தேர்வு
கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், ஆண்கள் 167 செ.மீட்டரும், பெண்கள் 157 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். எந்தவித குற்ற வழக்கில் ஈடுபடாமலும், சாதி மத அரசியல் மற்றும் எவ்வித சங்கத்திலும் உறுப்பினராக இருக்கக்கூடாது.
விண்ணப்பங்களை கடலூர் ஊர்க்காவல் படை அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்குள் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து வருகிற 28-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விதிமுறைகள் நிர்ணயம்
பின்னர் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு, பணி அமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு மாதத்திற்கு 5 நாட்கள் பணியும், ஊதியமாக ரூ.2,800 வழங்கப்படும். (நாள் ஒன்றுக்கு ரூ.560 வீதம்) காலந்தாழ்ந்து வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
கடலோர காவல் குழும பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மீனவ இளைஞராகவும், அதற்கு கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரியிடமிருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் வசிப்பிடம் (இருப்பிட சான்று அவசியம்) இருக்க வேண்டும். கடற்கரை கடலோர காவல் நிலையத்தின் எல்லை பகுதியில் 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்க வேண்டும். கடலில் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 1 அல்லது 2 கிலோ மீட்டர் கடல் மணலில் ஓட (நேரம் மற்றும் விதிமுறைகள் நிர்ணயிக்கப்படும்) வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு தடையில்லா சான்று
இதேபோல் ஊர்க்காவல் படை பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு ஊழியராக இருப்பின் அவர்தம் துறை அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். 20 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதிகளை பெற்ற கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.