குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள்

கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் மக்கள் தினந்தோறும் சந்தித்து வரும் பிரச்சினைகள், குறைகளை பற்றி பார்த்து வருகிறோம். இன்று (வெள்ளிக்கிழமை) 38-வது வார்டு மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள், குறைகளை பார்க்கலாம்.;

Update: 2022-08-11 17:01 GMT


இந்த வார்டில் மாரியம்மன் கோவில் தெரு, பாலகிருஷ்ணன்நகர், அருண்நகர், காமாட்சிநகர், நாராயணசாமிநகர், ராகவா நகர், பாலகிருஷ்ணன் தெரு, பாலாஜிநகர், அந்தோணியார்தெரு, பகவான் மகாவீர் தெரு, மோகன் தெரு, வீரப்பன் தெரு, இருசப்பன் தெரு, பென்ஷனர்தெரு, தூக்குமரத்து காலனி, பனங்காட்டு காலனி சுனாமி குடியிருப்பு, கிளைவ் தெரு, கோவலன் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, சஞ்சீவிராயன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் உள்ளன.

கழிவறை

இந்த வார்டில் உள்ள மோகன் தெரு, பங்களா தெருவில் 2 பொது கழிவறை உள்ளது. இந்த கழிவறை சேதமடைந்து காணப்படுகிறது. மோகன் தெருவில் உள்ள கழிவறை உடைந்து கிடக்கிறது. மேல் தளம் இல்லை. ஆகவே இப்பகுதி மக்கள் நலன் கருதி பொது கழிவறை கட்டிடத்தை சீரமைத்து அல்லது புதிதாக கட்டித்தர வேண்டும். இங்குள்ள திரவுபதி அம்மன் கோவில் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாரியம்மன் கோவில் தெரு, பகவான் மகாவீர் தெரு, கோவலன் தெரு, காமாட்சி தெரு, திரவுபதி அம்மன் கோவில் தெரு, மோகன்தெருவில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. பாலகிருஷ்ணன் நகர், நாராயணசாமிநகர் வடிகால் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலகிருஷ்ணன் நகர், நாராயணசாமிநகர், ராகவாநகர், காமாட்சிநகர் உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் குடிநீர் பிரச்சினை அதிக அளவில் உள்ளது. குடிநீர் குழாயில் தண்ணீர் கழிவுநீர் கலந்து வருவதால் அதை யாரும் குடிப்பதில்லை. 15 நாளைக்கு ஒரு முறை தான் மாநகராட்சி லாரிகளில் தண்ணீர் வருகிறது. அதை தான் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பெரும்பாலான மக்கள் வெளி நபர்கள் கொண்டு வரும் தண்ணீரை தான் பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையை போக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலைகள் சேதம்

பனங்காட்டு காலனி சுனாமிநகர், காமாட்சிநகர் உள்ளிட்ட விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதைவட மின் கேபிள் அமைப்பதற்காக பல இடங்களில் சாலைகள் உடைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பனங்காட்டு காலனி சுனாமிநகர் மக்களுக்கு பட்டா இது வரை வழங்கவில்லை. அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை அடைப்பை நிரந்தரமாக சரி செய்து தர வேண்டும். மோகன்தெருவில் பூங்கா அமைத்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது பற்றி மோகன் தெரு பாலகிருஷ்ணன் கூறுகையில், திரவுபதி அம்மன் கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணன்நகர், காமாட்சிநகரில் திறந்த வெளி கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இந்த கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்த வெளியில் இருக்கும் இந்த கால்வாயில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விழுந்து செல்கின்றனர். இதை தவிர்க்க அதை மூட வேண்டும்.

குடிநீர் பிரச்சினை

மழைக்காலங்களில் இந்த கால்வாயில் உள்ள கழிவுநீரும், மழைநீரும் சேர்ந்து தெருவுக்குள் செல்கிறது. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டும். சுனாமிநகரில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது பற்றி பென்ஷனர் தெரு தமிழரசன் கூறுகையில், படிக்கும் மாணவர்களுக்கு கணினி மையம் அமைத்து தர வேண்டும். கழிவுநீர் பிரச்சினை, வாய்க்கால் தூர்வாரவில்லை. தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. மாநகராட்சி குழாயில் வரும் தண்ணீரை பிடிக்க முடியவில்லை. தண்ணீர் கலங்களாக வருகிறது. இதனால் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளோம். வார்டில் பல சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். வார்டில் பல இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்