கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். போக்குவரத்து நெரிசலை தடுக்க வழி தெரியாமல் போலீசார் விழி பிதுங்கினர்.

Update: 2023-05-27 15:30 GMT

30 ஆயிரம் சுற்றுலா பயணிகள்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு மகுடம் சூட்டும் வகையில் கோடை விழா, மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. இதனால் கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கடந்த 2 நாட்களில் மட்டும் கொடைக்கானலுக்கு சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். குறிப்பாக நேற்று அதிகாலை முதல் மாலை வரை, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாபயணிகள் கொடைக்கானலுக்கு வந்தனர்.

சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் பெருமாள் மலை முதல் வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்கள் வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

போக்குவரத்து நெரிசல்

போதிய வாகன நிறுத்துமிடங்கள் இல்லாத காரணத்தால், வாகன ஓட்டிகள் ஆங்காங்கே சாலையோரத்திலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றனர். இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளின் வாகனங்களும் நெரிசலில் சிக்கி கொண்டன. அனைத்து ெதருக்களிலும் சுற்றுலா வாகனங்களின் அணிவகுப்பை பார்க்க முடிந்தது.

நட்சத்திர ஏரியை சுற்றியுள்ள சுமார் 4½ கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நெரிசல் மிகுந்து இருந்ததால், வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை சுற்றுலா பயணிகள் காண முடியவில்லை. இதனால் அவர்கள், வாகனங்களில் இருந்தபடியே புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர்.

பிரையண்ட் பூங்கா

இந்தநிலையில் வனப்பகுதியில் பிற்பகல் 2 மணி முதல் சுமார் ½ மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. ஆனால் நகர் பகுதியில் காலை முதல் மேகமூட்டங்கள் சூழ்ந்து, இதயத்தை வருடும் இதமான வானிலை நிலவியது. இதனை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.

இதேபோல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தனர். ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரியிலும் உற்சாகத்துடன் ஈடுபட்டனர். மலர் கண்காட்சி நடைபெற்று வரும் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

பூங்காவில் பூத்துக்குலுங்கும் லட்சக்கணக்கான மலர்களை கண்டுகளித்தனர். மலர்களால் உருவான பல்வேறு உருவங்களை பார்த்து ரசித்தனர்.

வாகனங்களில் முடக்கம்

ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்ததால் தங்கும் அறைகள் அனைத்து நிரம்பி வழிந்தன. சுற்றுலா பயணிகள் பலர் தங்களுக்கு அறை கிடைக்காமல் பரிதவித்தனர்.

இதனால் வாகனங்களிலேயே முடங்கினர். ஒரு சில சுற்றுலா பயணிகள் அறை கிடைக்காததால் தரைப்பகுதிக்கு திரும்பினர். கூட்டநெரிசலை சமாளிக்க வழி தெரியாமல் போலீசார் விழிபிதுங்கினர். சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக நியமிக்கப்பட்ட போலீசாரும், தன்னார்வலர்களும் செய்வறியாது திகைத்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொடைக்கானலில் இன்று வாரசந்தை நடைபெறுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க போலீசார் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

--------

Tags:    

மேலும் செய்திகள்