பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தொடர்விடுமுறை எதிரொலியாக திருச்சி பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.;

Update: 2023-10-20 19:52 GMT

தொடர்விடுமுறை எதிரொலியாக திருச்சி பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தொடர் விடுமுறை

தமிழகத்தின் மையப்பகுதியாக இருப்பதால் திருச்சி மத்திய பஸ்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அரசு விடுமுறை நாட்கள், விழாக்காலங்கள் உள்ளிட்ட நாட்களில் மத்திய பஸ்நிலையத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை மேலும் வருகிற 23-ந்தேதி ஆயுதபூஜை, 24-ந்தேதி விஜயதசமி பண்டிகை விடுமுறை வருகிறது. இதனால் 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. மேலும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் தசரா விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

அலைமோதிய கூட்டம்

இதனால் தொடர்விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாடவும், தசரா விழாவுக்காக சொந்த ஊர் செல்ல திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் பகுதி பொதுமக்கள் நேற்று மாலையே திருச்சி மத்திய பஸ்நிலையத்துக்கு புறப்பட்டு வந்தனர். இதனால் மாலை 5 மணி முதல் பஸ்நிலையம் பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

பஸ்களில் இடம்பிடிக்க பயணிகள் முட்டி மோதிக்கொண்டனர். இதுதவிர, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நேற்று நள்ளிரவு திருச்சிக்கு வந்தனர். இதனால் அதிகாலை வரை அவர்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர். ஒரே நேரத்தில் ஏராளமான பயணிகள் குவிந்ததால் பஸ்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.

இதுபோல் நேற்று மாலை திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக நள்ளிரவு தென்மாவட்டங்களுக்கு சென்ற ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. பலர் ரெயிலில் இடம் கிடைக்காமல் பஸ்களை பிடித்து சொந்த ஊருக்கு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்