குமரி மாவட்ட கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி குமரி மாவட்ட கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு கைநீட்டமும் வழங்கப்பட்டது.;

Update: 2023-04-14 19:49 GMT

நாகர்கோவில்:

தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி குமரி மாவட்ட கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு கைநீட்டமும் வழங்கப்பட்டது.

விஷூ பண்டிகை

தமிழ் புத்தாண்டான சோபகிருது ஆண்டு நேற்று பிறந்தது. தமிழகம் முழுவதும் தமிழ்ப்புத்தாண்டு தினமாக கொண்டாடப்படும் இந்த நாளை குமரி மாவட்டத்தில் சற்று வித்தியாசமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் நீண்ட காலமாக இணைந்திருந்ததாலும், மலையாளமொழி பேசும் மக்கள் அதிகமாக இருப்பதாலும் தாய் தமிழகத்துடன் குமரி இணைந்த பிறகும் சில பண்டிகைகள் கேரள பாரம்பரியம் மாறாமல் கொண்டாடப்பட்டு வருகிறது.

சித்திரை பிறப்பை வருடப்பிறப்பாக நாம் கொண்டாடும் வேளையில், மலையாள மக்கள் சித்திரை விஷூ பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். அதனால் தமிழ்ப்புத்தாண்டு தினம் குமரி மாவட்டத்தில் சித்திரை விஷூ பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் வீடுகளிலும், கோவில்களிலும் கனி காணல் நிகழ்ச்சியும், கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக பழங்கள், காய்கறிகள், காசு-பணம் போன்றவற்றை கைநீட்டமாக வழங்குவதும், வீடுகளில் பெரியோர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள இளையோரை ஆசீர்வதித்து பணம், காசு, தங்க நகைகள் ஆகியவற்றை கைநீட்டமாக வழங்குவதும் இந்த நாளின் தனிச்சிறப்பாகும்.

பக்தர்கள் கூட்டம்

தமிழ்ப்புத்தாண்டையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் நேற்று விஷூ கனி காணும் நிகழ்ச்சி நடந்தது. இதனால் பக்தர்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து, புத்தாடைகள் அணிந்து கோவில்களுக்கு சென்றதை காண முடிந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடந்தது. கோவிலில் சாமி தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். நாகர் சிலைகளுக்கு பாலூற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். இதேபோல் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் காய், கனிகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு காய் கனிகள், கைநீட்டம் வழங்கப்பட்டது.

குடும்பம், குடும்பமாக...

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை கனி காணும் நிகழ்ச்சியையொட்டி பல்வேறு விதமான காய்கறிகள், இளநீர்கள் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலிலும் காய்கறிகள் பெருமாளுக்கு படைக்கப்பட்டது. பெருமாள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்த பக்தர்களுக்கு கை நீட்டமும், காய்கறிகளும் வழங்கப்பட்டது. நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையம் குட்ஷெட் பாலவிநாயகர் கோவிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி, வெள்ளிமலை முருகன் கோவில், குமாரகோவில் குமாரசாமி கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குடும்பம், குடும்பமாக வந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர். சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு கைநீட்டம் வழங்கப்பட்டது.

கனி காணல் நிகழ்ச்சி

வீடுகளிலும் கனி காணும் நிகழ்ச்சி நடந்தது. வீடுகளில் உள்ள பூஜை அறைகளில் காய் கனிகள் மற்றும் பழவகைகள், மங்கலப்பொருட்கள், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், தானிய வகைகள், காசு-பணம் ஆகியவற்றை படைத்து வைத்து கனி கண்டு சாமி தரிசனம் செய்தனர். வீடுகளில் உள்ள பெரியோர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு ஆசி வழங்கி கைநீட்டம் வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்