நகராட்சி பகுதி சபை கூட்டம்

நாமக்கல் எம்.ஜி.ஆர். காலனி சமுதாயக்கூடத்தில் நடந்த நகராட்சி பகுதி சபை கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங், ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

Update: 2022-11-01 19:40 GMT

பகுதி சபை கூட்டம்

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு எம்.ஜி.ஆர். காலனி சமுதாயக்கூடத்தில் பகுதி சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி, ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து மக்களுக்கான அரசு திட்டங்கள், 10-வார்டின் வளர்ச்சி பணிகள், அரசின் அனைத்து துறை திட்டங்கள் மற்றும் பயனாளிகளின் விவரம், தேவைப்படும் அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசியதாவது:-

முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில் நாமக்கல் நகராட்சி 10-வது வார்டில் பகுதி எண்-1-க்கான நகராட்சி பகுதி சபை கூட்டம் நடக்கிறது. நாமக்கல் நகராட்சியில் வார்டு குழுக்கள் மற்றும் பகுதி சபைகள் உருவாக்கப்பட்டு உள்ளது.

156 பகுதிகள்

நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகளுக்கு 156 பகுதிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு நடைபெறும் பகுதி சபா கூட்டங்களில் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு தங்களது பகுதிகளில் தேவைப்படும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்து நகரின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்.

தங்களது வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்தி மழை நீரை சேகரிக்க வேண்டும். மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் இருக்க தங்களது சுற்றுப்புறத்தில் பயன்பாடற்ற டயர், தொட்டி, ஆட்டுக்கல் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்காத வகையில் அப்புறப்படுத்த வேண்டும். நீரினை 3 நாட்களுக்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரங்களை கொசுக்கள் முட்டையிடாத வகையில் பாதுகாப்பாக மூடியிட்டு பயன்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும். பெண் கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் வழங்கிட வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.

நகர மக்கள்

இதில் ராஜேஸ்குமார் எம்.பி. பேசியதாவது:-

கிராமப்புற மக்கள் தங்கள் ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்துகொள்ளவும், தேவையான திட்டங்களை கேட்டு பெறவும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் நகர பொதுமக்களும் பயனடையும் வகையில் நகர பகுதி சபா கூட்டங்களை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன் காரணமாக மக்களை நாடி நகராட்சி நிர்வாக அலுவலர்களும், அரசு அலுவலர்களும், நகராட்சி மக்கள் பிரதிநிதிகளும் நேரடியாக சென்று, குறைகளை கேட்டு சரி செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு ராஜேஸ்குமார் எம்.பி. பேசினார்.

இதில் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, 10-வது வார்டு உறுப்பினர் சிவக்குமார், நகராட்சி ஆணையாளர் சுதா, தாசில்தார் சக்திவேல் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்