தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெறலாம்: கலெக்டர் தகவல்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெறலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.;
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 84 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் கேசிசி திட்டத்தின் கீழ் உரிய காலத்தில் கடன் தொகையினை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு, வளர்ப்பு தொடர்புடைய கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கேசிசி பயிர்க்கடன், கேசிசி கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், மகளிர் சுயஉதவிக்குழுக்கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் கடன் (திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மட்டும்), டாப்செட்கோ சுயஉதவிக்குழு கடன், டாம்கோ சுயஉதவிக்குழு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆதார் கார்டு நகல், குடும்ப அட்டை நகல், நிலவுடமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பான வி.ஏ.ஓ. அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ, விவசாயிகள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பெற்று நுழைவுக்கட்டணம், பங்குத்தொகை ரூ.110 செலுத்தி உறுப்பினராக சேர்ந்து ஆவணங்களுடன் கடன் மனுவை சமர்ப்பித்து பயிர்க்கடன் பெற்று பயன் அடையலாம். சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்றுக்கொள்ளலாம். இதில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் கரூர் மண்டல இணைப்பதிவாளர் 73387 21001, கரூர் சரக துணை பதிவாளர் 93457 92793, குளித்தலை சரக துணைப்பதிவாளர் 94438 68727, கரூர் சரக துணைப்பதிவாளர் அலுவலகம் 04324 - 296065, குளித்தலை சரக துணைப்பதிவாளர் அலுவலகம் 04323 - 222388 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.