பயிர் காப்பீடு தொகையை விரைந்து வழங்க வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
பயிர் காப்பீடு தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.;
பயிர் காப்பீடு தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
குறை தீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசன் தலைமையில் நடைபெற்றது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, கூட்டுறவு இணை பதிவாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் நெல் பயிர்கள் கருகிவிட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில அரசின் நிவாரணமும், மத்திய அரசின் பயிர்காப்பீடு இழப்பீடும் முழுமையாக வழங்க வேண்டும். பயிர்கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். பயிர்கள் நிலை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் நலன் காக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கவாஸ்கர்: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளை அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை யாரும் மதிப்பதில்லை. தமிழகத்தை சேர்ந்தவர்கள் அல்லாமல் பிறமாநிலத்தவர்களை பணியமர்த்தி உள்ளதால் அவர்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் வசைபாடுகின்றனர். இந்தி கற்றுக்கொண்டு வா என்று கூறுகின்றனர். நம் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி கொண்டு நம் மாநிலத்தில் வேலை பார்த்து கொண்டு மாநிலத்தின் முதுகெலும்பான விவசாயிகளிடம் உங்களின் கேள்விக்கு பதில் தெரியவேண்டும் என்றால் இந்தி, ஆங்கிலம் கற்றுக்கொண்டு வா என்று கூறுவது எந்த வகையில் நியாயம். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடும் நடவடிக்கை
நேர்முக உதவியாளர்: இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று வங்கியாளர்கள் கூட்டத்தில் விசாரிக்கப்படும்.
முன்னோடி வங்கி அதிகாரி:- வங்கியின் விவரம் குறித்து தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பாக்கியநாதன்: மாவட்டத்தில் 5 கோடி பனைமரங்கள் இருந்த நிலையில் தற்போது ஒன்றரை கோடியாக குறைந்துவிட்டது. சோலார் நிலையம் என்ற பெயரில் கடலாடி தாலுகா பகுதியில் பனைமரங்களை ஆயிரக்கணக்கில் வெட்டி வருகின்றனர். இதனால் பனைமரங்களை நம்பி உள்ள விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
பயிர் காப்பீடு
கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் நெல்கொள்முதல் நிலையங்களை கூடுதலாக அனைவரும் பயனடையும் வகையில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். விவசாயிகள் தேவைப்படும் இடங்களை தெரிவித்தால் சூழ்நிலைக்கேற்ப அமைத்து தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பயிர்காப்பீடு, நிவாரணம் விரைந்து வழங்க கோரியும், பயிர்கடன் தள்ளுபடி செய்யக்கோரியும் ஒட்டுமொத்த விவசாயிகளும் தொடர்ந்து அடுத்தடுத்து வலியுறுத்தி பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.