பருவ மழையை நம்பி 1.85 லட்சம் எக்டேரில் பயிர் சாகுபடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவ மழையை நம்பி 1.85 லட்சம் எக்டேரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.;

Update:2023-10-19 00:15 IST


பருவமழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை பயன்படுத்தி சுமார் 1.85 லட்சம் எக்டேரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது பருவ மழை தொடங்கி உள்ளதால் விதைப்பு பணிகள் முடிந்து களை எடுத்தல், மேல் உரம் போடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 240 மி.மீ. மழை பெய்துள்ளது. அக்டோபரில் 52 மி.மீ. மழை பெய்துள்ளது. அடி உரம் மேல் உரம் தகுந்த நேரத்தில் இட வேண்டும்.

மேலும், சாகுபடிக்கு தேவையான உரங்கள், உரிமம் பெற்ற 128 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 140 தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மானிய உரம் விற்பனையை வேளாண்மை அலுவலர்கள், ஆய்வாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

உரிமம் ரத்து

தற்போது யூரியா 3700 டன், டி.ஏ.பி. 2200 டன், பொட்டாஷ் 124 டன், காம்ப்ளக்ஸ் 1983 டன், சூப்பர் பாஸ்பேட் 48 டன் உரங்கள் இருப்பு உள்ளது. மாவட்டத்தில் உள்ள தனியார் சில்லரை உர விற்பனையாளர்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உரங்களின் இருப்பு மற்றும் விலைப்பட்டியல் விவசாயிகளுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும்.

கூடுதல் விலைக்கு விற்க கூடாது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் உரிமம் ரத்து செய்யப்படும் என ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் சரஸ்வதி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்