பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்று வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
வேலூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி முன்னிலை வகித்தார்.
இதில், போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன், ஆல்பர்ட்ஜான், கிரண்ஸ்ருதி, கார்த்திகேயன், வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) பிரசன்ன குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தடுக்க வேண்டும்
கூட்டத்துக்கு வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் தலைமை தாங்கி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பெண் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை பற்றியும், அந்த வழக்குகளின் தற்போதைய நிலை மற்றும் கோர்ட்டில் உள்ள வழக்குகள், போக்சோவில் தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளின் விவரங்கள் குறித்து 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தார்.
பின்னர் அந்த வழக்குகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். அதைத்தொடர்ந்து 4 மாவட்டங்களில் போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்களை கைது செய்து, அனைத்து வழக்குகளையும் விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.