திருவாரூர் தியாகராஜர் கோவில் மேற்கு கோபுர வாசல் மண்டபத்தில் விரிசல்

திருவாரூர் தியாகராஜர் கோவில் மேற்கு கோபுர வாசல் மண்டபத்தில் விரிசல்;

Update: 2023-08-06 18:45 GMT

திருவாரூர் தியாகராஜர் கோவில் மேற்கு கோபுர வாசல் மண்டபத்தில் ஏற்பட்டு்ள்ள விரிசலை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தியாகராஜர் கோவில்

உலக புகழ் பெற்ற தியாகராஜர் கோவில் சர்வதோஷ பரிகார தலமாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குகிறது. இந்த கோவிலின் ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரியது.

இந்த சிறப்புக்குரிய கோவிலின் மேற்கு கோபுர வாசல் என்பது மிக பிரதான வழியாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் தான் கமலாலய குளம் உள்ளது. மேலும் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்கும் போதிய இடவசதி உள்ளது. இதன் காரணமாக முக்கிய பிரமுகர்கள் மட்டுமின்றி பக்தர்கள் பெரும்பாலும் மேல கோபுர வாசலை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கோபுர வாசல் நுழைவு பகுதியில் சபாபதி மண்டபம் உள்ளது.

சபாபதி மண்டபம்

இந்த மண்டபத்தை கடந்து தான் கோவிலுக்கு செல்ல வேண்டும். இந்த மண்டபத்தில் தான் கோவில் நிர்வாக அலுவலகம் மட்டுமின்றி அருங்காட்சியகமும் அமைந்துள்ளது. விழா காலங்களில் இந்த மண்டபத்தில் தான் தியாகராஜருக்கு அபிஷேகம், பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த விழா காலங்களில் அலுவலகம் இடம் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

இதன் காரணமாக சபாபதி மண்டபம் என்பது கோவிலின் முக்கிய பகுதியாக திகழ்கிறது.

மேற்கூரையில் விரிசல்

இந்த மண்டப நுழைவு வாயில் நடைபாதை வழியாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வேண்டும். கடந்த2018-ம் ஆண்டு இந்த நடைபாதை மண்டபத்தின் மேற்கூரையில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் கூரை முழுமையும் பலவீனப்படுத்தி இடியும் நிலை ஏற்பட்டதால் உடனடியாக கோவில் நிர்வாகத்தினர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முட்டு கட்டைகளை கொடுத்தனர்.

மேலும் நடைபாதை இருபுறங்களையும் தடுப்புகள் கொண்டு அடைத்து பக்தர்கள் பயன்படுத்தாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

நடைபாதை மண்டபத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து தகவல் அறிந்த அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பழமை வாய்ந்த கட்டிடம் என்பதால் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சீரமைக்க கோரிக்கை

அவர்களின் பரிந்துரையின் படி மண்டபத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறநிலையத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு அருகே உள்ள உயர்மட்ட படி வழிபாதையை பயன்படுத்தி செல்ல வேண்டியுள்ளது. இதில் வயதானவர்கள் படியில் ஏறி செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். பல்வேறு காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித பணிகளும் நடைபெறாமல் உள்ளது.

இதனால் மழை நேரங்களில் தண்ணீர் மண்டப விரிசல் வழியாக கசிவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் இந்த மண்டபம் மேலும் பலவீனப்பட்டு வருகிறது. இந்த நடைபாதை மண்டபம் வலுவிழந்து இடியும் போது, சபாபதி மண்டபத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், தேரோட்டம், தெப்பம் என பல்வேறு விழாக்களில் இந்த பலவீனமடைந்த மண்டபத்தின் வழியாக தான் பக்தர்கள் சென்று வருகின்றனர். எனவே உடனடியாக பழுதடைந்த மண்டபத்தை சீரமைத்திட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழை காலங்களில் தண்ணீர் கசிவு

இதுகுறித்து திருவாரூர் பகுதியை சேர்ந்த பக்தர் சண்முகராஜ் கூறுகையில், திருவாரூர் தியாகராஜர் கோவிலின் பிரதான வழிபாதை என்பது மேலகோபுர வாசல் தான். வாகனம் நிறுத்துவதற்கும், கமலாலய குளத்தில் புனித நீராடவும் வசதியாக அமைந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரதான நுழைவு வாயில் மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து இந்த வழிபாதை அடைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் நேர் வழியாக கோவிலுக்கு செல்லாமல் அருகில் உள்ள படி வழிபாதையை பயன்படுத்தி வருகின்றனர். விரிசல் ஏற்பட்ட மண்டபத்தில் மழை காலங்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. இந்த மண்டபம் நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து வருகிறது. பலவீனப்பட்டு வரும் சபாபதி மண்டபத்தின் நுழைவு வாயில் ஏதேனும் விபத்து ஏற்படும் முன்பு சீரமைத்திட கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்