வீட்டில் வைத்து நாட்டு வெடி தயாரித்தவருக்கு போலீசார் வலைவீச்சு
முத்துப்பேட்டை அருகே வீட்டில் வைத்து நாட்டு வெடி தயாரித்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். தப்பியோடியவரின் வீட்டில் இருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
முத்துப்பேட்டை;
முத்துப்பேட்டை அருகே வீட்டில் வைத்து நாட்டு வெடி தயாரித்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். தப்பியோடியவரின் வீட்டில் இருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வீட்டில் வைத்து நாட்டு வெடி தயாரிப்பு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் தெற்குக்காடு பகுதியை சேர்ந்தவா் கல்யாணசுந்தரம் (வயது 55). இவர், தனது வீட்டில் வைத்து நாட்டு வெடிகளை தயாரிப்பதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையில் போலீசார், சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்த கல்யாணசுந்தரம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் கல்யாணசுந்தரம் வீட்டில் சோதனை நடத்தினர்.
பரபரப்பு தகவல்கள்
இந்த சோதனையில் வீட்டின் பின்பகுதியில் ஏராளமான நாட்டு வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்ேறு பரபரப்பு தகவல்கள் வெளியானது.தப்பியோடிய கல்யாணசுந்தரம், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு கிராமத்தில் உள்ள அரசு அனுமதிபெற்ற வெடி தயாரிக்கும் இடத்தில் வேலை பார்த்து வருவதும், வேலை இல்லாத நேரத்தில் மூலப்பொருட்களை வாங்கி வந்து தனது வீட்டின் பின்புறம் வைத்து நாட்டு வெடிகள் தயாரித்து வந்ததும் தெரிய வந்தது.
வெடிபொருட்கள் பறிமுதல்
இந்த சோதனையின்போது சணல், நாட்டு வெடிகள், சணல் பைப் வெடிகள், பேப்பர் சாட் வெடிகள், திரி, சரவெடிகள் மற்றும் வெடிதயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.இங்கு தயாரிக்கப்படும் பட்டாசு வகைகளை இந்த பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழா, குடமுழுக்கு, திருமணம், துக்கம் போன்ற நிகழ்வுகளுக்கு நீண்டகாலமாக கல்யாணசுந்தரம் விற்பனை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைான கல்யாணசுந்தரத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.