பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி ஏற்படும் நிலை

விதிகளை பின்பற்ற மறுக்கும் ஒரு சிலரால் பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.;

Update:2023-03-27 01:02 IST

சிவகாசி, 

விதிகளை பின்பற்ற மறுக்கும் ஒரு சிலரால் பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

பட்டாசு ஆலைகள்

விருதுநகர் மாவட்டத்தில் 1000-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் உரிய அனுமதி பெற்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 8 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய பட்டாசு உற்பத்தி செய்யப்படாத நிலையில் பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பட்டாசு உற்பத்தி குறைந்த நாள் இடைவெளியில் தொடங்கப்பட்டது. தற்போது வரை எவ்வித பிரச்சினையும் இன்றி பட்டாசு உற்பத்தி நடைபெற்று வருகிறது.

விதிமீறல்கள்

இதற்கிடையில் சில பட்டாசு ஆலைகளில் அரசின் விதிகளை மீறி பட்டாசு உற்பத்தி செய்யப்படுவது அதிகாரிகளின் ஆய்வில் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் விதிமீறல்கள் அதிகரித்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் குழு பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே நடவடிக்கைக்கு உட்பட்ட சில பட்டாசு ஆலைகள் மீண்டும், மீண்டும் விதிமீறல்களில் ஈடுபடுவதால் விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதுபோன்ற விபத்துக்களால் பட்டாசு தொழில் நெருக்கடிக்கு உள்ளாகும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

நெருக்கடி

இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது, ஒரு சில பட்டாசு ஆலை நிர்வாகத்தினர் விதிகளை மீறி பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். பட்டாசு ஆலைகளை குத்தகைக்கு விட கூடாது. அதிக ஆட்களை பணியில் அமர்த்த கூடாது என்று பல முறை எச்சரித்தும் தொடர்ந்து இதுபோன்ற விதிமீறல்கள் நடக்கிறது. இதனால் பல இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்துள்ளது. இதனால் பட்டாசு தொழில் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்படும் நிலை உருவாகும்.

எனவே விதிகளை பின்பற்றி பட்டாசு உற்பத்தியை செய்தால் விபத்து இல்லாமல் பட்டாசுகளை உற்பத்தி செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்