பட்டாசுகள் வெடித்து மாடி வீடு இடிந்தது; இந்து முன்னணி நிர்வாகி-மனைவி பலி

திண்டுக்கல் அருகே பட்டாசுகள் வெடித்து மாடி வீடு இடிந்ததில் இந்து முன்னனி நிர்வாகி-மனைவி பலி ஆகினர்.

Update: 2023-01-17 22:41 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள வீரக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 40). இவர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலாளர் ஆவார். இவர், செம்பட்டியில் புல்லுவெட்டி குளம் எனும் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் பட்டாசு கடை நடத்தி வந்தார்.

மேலும் அந்த வணிக வளாகத்தின் மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருடைய மனைவி நாகராணி (35). இவர்களுக்கு தீப்திகா (7) மற்றும் கனிஷ்கா (5) ஆகிய 2 மகள்களும், மோகன் (4) என்ற மகனும் உள்ளனர்.

பயங்கர வெடிச்சத்தம்

இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் ஜெயராமன், அவருடைய மனைவி நாகராணி ஆகியோர் வீட்டில் இருந்தனர். பொங்கல் விடுமுறை என்பதால் அவர்களின் குழந்தைகள் 3 பேரும் கீழே சாலையோரம் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அந்த சத்தத்தை கேட்டதும் அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் என்னவோ, ஏதோ நினைத்து பதறியடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தனர். அங்கு ஜெயராமனின் குழந்தைகள் 3 பேரும் சாலை ஓரம் நின்று பயந்து நடுங்கியபடி அழுது கொண்டிருந்தனர்.

மாடி வீடு இடிந்தது

அதேநேரம் ஜெயராமன் வசித்து வந்த மாடி வீடு இடிந்து விழுந்து கொண்டிருந்தது. ஒருசில வினாடிகளில் மாடி வீடு முழுவதும் இடிந்து விழுந்து விட்டது. மாடி வீட்டு சுவர் விழுந்ததில் வணிக வளாகத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 கார்கள் சேதம் அடைந்தன.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், ஜெயராமனின் குழந்தைகளிடம் விசாரித்தனர். அதில் வெடித்து சிதறிய வீட்டுக்குள் ஜெயராமன் மற்றும் அவருடைய மனைவி சிக்கி கொண்டது தெரியவந்தது. ஆனால் 2 பேரையும், பொதுமக்களால் மீட்க முடியவில்லை.

மீட்பு பணி

தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் மாடி வீடு என்பதால் இடிபாடுகளை உடனடியாக அகற்ற முடியவில்லை. இதையடுத்து 3 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு இடிபாடுகளை அகற்றி, கணவன்-மனைவியை மீட்கும் பணி நடைபெற்றது.

உடல்கள் மீட்பு

சுமார் 5 மணி நேரத்துக்கு பின்னர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியான நாகராணியின் உடல் மீட்கப்பட்டது. அதையடுத்து ஜெயராமனின் உடலும் மீட்கப்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்ததில் வீடு இடிந்து, 2 பேரும் பலியானது தெரியவந்தது. வீட்டின் கீழ் பகுதியில் உள்ள கடையில் இருந்த பட்டாசுகளும் சேர்ந்து வெடித்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்