மாணவி சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில், பொதுமக்கள் சாலை மறியல்
மாணவி சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அதனால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் மாணவியின் உறவினர்கள் மற்றும் மாணவர்கள், பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடைகள் அடைப்பு
இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் கடை வைத்திருந்தவர்கள், தங்களது கடைகளை அடைத்து விட்டு சென்றனர். இதுபற்றி அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாலை 5 மணி அளவில் கலைத்தனர். அதன் பிறகே அப்பகுதியில் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. இந்த மறியலால் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.