கணினி ஆபரேட்டர் தற்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, கணினி ஆபரேட்டர் தற்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.;

Update: 2022-12-19 18:45 GMT

கோத்தகிரி,

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, கணினி ஆபரேட்டர் தற்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

கோடநாடு வழக்கு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மறு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. சசிகலா உள்பட இதுவரை 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் 1,500 பக்கம் கொண்ட விசாரணை ஆவணங்களை ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதேபோல் மற்றொரு நகல் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

3.7.2017-ந் தேதி கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக பணியாற்றிய தினேஷ்குமார், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை தொடர்பாக மீண்டும் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இந்தநிலையில் நேற்று காலை 10 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் 7 அதிகாரிகள் 2 வாகனங்களில் கோத்தகிரி அருகே கெங்கரை கிராமத்திற்கு சென்றனர்.

அங்கு தற்கொலை செய்த தினேஷ்குமாரின் வீட்டிற்கு சென்று, அவரது தந்தை போஜன், தாய் கண்ணகி மற்றும் தினேஷின் நண்பர்கள் 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். மதியம் 2 மணி வரை விசாரணை நடந்தது. பின்னர் மீண்டும் விசாரணை நடத்த உள்ளதாக கூறி விட்டு போலீசார் அங்கிருந்து சென்றனர்.மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு ஒருவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது.


Tags:    

மேலும் செய்திகள்