போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
பொதக்குடியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
கூத்தாநல்லூர்:
பொதக்குடியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றித்திரியும் மாடுகள்
கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடியில் இருந்து பொதக்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கூத்தாநல்லூர், கொரடாச்சேரி, பொதக்குடி, குடவாசல், கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம், வடபாதிமங்கலம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல முடியும். இந்த சாலை வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் தினமும் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகின்றன. மேலும்சாலையில் குறுக்ேக ஓடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் சாலையில் மாடுகள் படுத்துகொள்கின்றன..
விபத்துகள்
அப்போது மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கூத்தாநல்லூரை சேர்ந்த சந்தானகிருஷ்ணன் கூறுகையில், பொதக்குடி சாலை போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் பொதக்குடி கடைவீதி, சேகரை கடைவீதி போன்ற இடங்களில் தினமும் சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல சிரமம் ஏற்படுகிறது.சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்
பொதக்குடி ஜியாவுதீன்:-பொதக்குடி கடைவீதி சாலையில் பகல் நேரம் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. சாலையில் படுத்து தூங்கும் மாடுகள் சண்டை போட்டு கொண்டு அங்கும், இங்குமாக ஓடுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. கடைவீதியில் உள்ள கடைகளில் பொருட்களை சேதப்படுத்துகிறது. மாடுகள் பள்ளிகளுக்குள் சென்று படுத்து கொள்கின்றன. எனவே மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.