கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-05-08 16:35 GMT

தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர்.

இந்த நிலையில் மனு கொடுப்பதற்காக, கலெக்டர் அலுவலகம் வந்த ஒரு ஆணும், பெண்ணும் திடீரென தாங்கள் கொண்டு வந்த பையில் வைத்திருந்த கேனை எடுத்து, அதில் உள்ள மண்எண்ணெயை தங்களது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இதனையடுத்து 2 பேரிடமும் போலீசார் விசாரித்தனர்.

நிலம் ஆக்கிரமிப்பு

விசாரணையில் அவர்கள், திண்டுக்கல்லை அடுத்த சென்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 53), அவருடைய மனைவி விஜயா (47) என்று தெரியவந்தது.

இவர்களுக்கு சொந்தமான நிலத்தை போலி பட்டா மூலம் சிலர் ஆக்கிரமித்தனர் என்றும், அதனை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதாகவும் கண்ணீர் மல்க அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் அவர்களை எச்சரித்தனர். மேலும் கலெக்டரிடம் அழைத்துச்சென்று மனு கொடுக்க ஏற்பாடு செய்தனர். பின்னர் விசாரணைக்காக அவர்கள் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மயானத்துக்கு பாதை

நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார்நத்தம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள மயானத்துக்கு செல்ல பாதை வசதி வேண்டும் என கேட்டு மனு கொடுத்தனர்.

கன்னிவாடி ஆர்.சி.தெருவை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் உள்ள தேவாலயத்தில் திருவிழா நாட்களில் தேர்பவனி செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றும், அதனை மீட்டுத்தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இதேபோல் திண்டுக்கல்லை அடுத்த அடியனூத்து பெரியார்நகரை சேர்ந்த முஸ்லிம் பெண்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியை சேர்ந்த பலர் வீடு இல்லாமல் தவிக்கின்றனர். எனவே அவர்கள் வீடு கட்ட இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

தாண்டிக்குடி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

242 மனுக்கள்

மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 242 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்