தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை

சின்னமனூர் அருகே குடும்ப பிரச்சினையில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.;

Update: 2023-08-29 07:15 GMT

குடும்ப பிரச்சினை

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அப்பிபட்டி வடக்குத்தெருவில் வசித்து வந்தவர் பிரபாகர் (வயது 30). எலக்ட்ரீசியன். இவரது மனைவி ஐஸ்வர்யா (26). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4 வயதில் மகளும், 2 வயதில் மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஐஸ்வர்யா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த ஐஸ்வர்யா தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி, அன்றைய தினம் இரவு கணவர், குழந்தைகள் தூங்கிய பிறகு ஐஸ்வர்யா வீட்டில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நள்ளிரவு திடுக்கிட்டு எழுந்த பிரபாகர், மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தன்னால் தான் அவர் தூக்குப்போட்டதாக மனவேதனை அடைந்தார். இதனால் பிரபாகர், தனது மனைவியின் உடலை கீழே இறக்கிவிட்டு, அவர் எந்த கயிற்றில் தூக்குப்போட்டாரோ அதே கயிற்றில் பிரபாகரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதற்கிடையே நேற்று காலை கண்விழித்த அவர்களது மகள், தாய் அசைவற்று கிடப்பதையும், தந்தை தூக்கில்தொங்கியபடி கிடந்ததையும் பார்த்து செய்வதறியாது திகைத்தாள். இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் அவள் கூறினாள். அவர்கள் விபரீதத்தை அறிந்து பிரபாகரின் வீட்டுக்கு ஓடி வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.

சோகம்

பின்னர் இதுகுறித்து அவர்கள் ஓடைப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பிரபாகர்-ஐஸ்வர்யா தம்பதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப பிரச்சினையில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்