மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு - மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அனைவருக்கும் சீட்

எம்.பி.பி.எஸ் படிப்பில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 47 பேர் மட்டுமே தகுதி பெற்றிருப்பதால் விண்ணப்பித்த அனைவருக்கும் சீட் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

Update: 2022-10-19 05:28 GMT

சென்னை,

எம்.பி.பி.எஸ் படிப்பில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 212 இடங்கள் உள்ள நிலையில், 47 பேர் மட்டுமே தகுதி பெற்றிருப்பதால் விண்ணப்பித்த அனைவருக்கும் சீட் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 'நீட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில், அதில் தேர்ச்சி பெற்றவர்கள், மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி, கடந்த மாதம் (செப்டம்பர்) 22-ந் தேதி முதல் கடந்த 6-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. பொதுப் பிரிவினருக்கு இன்று தொடங்கும் கலந்தாய்வு 25-ந் தேதி வரையிலும், சுயநிதி கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 21-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரையிலும் நடக்கிறது. இதன்படி, முதல் சுற்று கலந்தாய்வு நிறைவுபெற்று, 27 மற்றும் 28-ந் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, 30-ந் தேதி இறுதி முடிவுகள் வெளியிடப்படும். முதல் சுற்று கலந்தாய்வில் தேர்வானவர்கள் அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதி கல்லூரிகளில் சேரவேண்டும்.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நேரடி முறையில் இன்று காலை 9 மணிக்கு, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாகவே இன்று நடைபெறும் சிறப்பு கலந்தாய்வுக்கு 147 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தகுதிபெற்றுள்ள 47 பேருக்குமே எம்பிபிஎஸ் இடங்கள் கிடைப்பது உறுதி ஆகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்