11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.;

Update: 2023-06-22 19:30 GMT

அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

மாணவர் சேர்க்கை

திருவாரூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான பெயர் பட்டியல் தமிழக பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே அம்மையப்பன் அரசு மாதிரி பள்ளியில் நடந்த 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

அப்போது அவர், 'மாணவர்கள் நலன் கருதி பல்வேறு வாய்ப்புகளை அரசு கல்வித்துறையில் வழங்கிவருகிறது. அதனை தன்னம்பிக்கையோடு பயன்படுத்தி மாணவர்கள் அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும்' என்றார்.

அகில இந்திய தரவரிசை

கடந்த கல்வி ஆண்டில் 'நிப்ட்' தேர்வில் பங்கேற்ற 9 மாணவர்களில் நிரஞ்சன் என்ற மாணவர் அகில இந்திய தரவரிசையில் 53-வது இடத்தினைப் பிடித்து சென்னை 'நிப்ட்' நிறுவனத்தில் சேருவதற்கான வாய்ப்பினை பெற்றுள்ளார்.

அவர் உள்பட 7 மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் உள்ள 'நிப்ட்' நிறுவனங்களுக்குரிய சேர்க்கை கட்டணம் ஒரு மாணவருக்கு தலா ரூ.1,83,200 வீதம் செலுத்தி அதற்கான இட ஒதுக்கீட்டு ஆணையினையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். போபாலில் உள்ள 'நிப்ட்' நிறுவனத்தில் இடம் கிடைத்து சேருவதற்கு தயங்கிய மாணவர்களுடனும் மாவட்ட கலெக்டர் கலந்துரையாடினார். அப்போது ஆசிரியர்களோடு பேசி நல்லதொரு முடிவை எடுத்து எதிர்காலத்தை சிறப்பாக மாற்ற வழிவகை காணுங்கள் என மாணவர்களை கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் ஜே.இ.இ. தேர்வில் காத்திருப்பு தரவரிசைப் பட்டியலில் அகில இந்திய அளவில் 1420-வது இடத்தைப் பெற்றுள்ள மாணவி அட்சயாவுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சங்கீதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, தலைமை ஆசிரியர் விவேகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்