நல்லூரில் கவுன்சிலர்கள் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம்

பேரூராட்சி அலுவலக இடமாற்றத்தை கண்டித்து நல்லூரில் கவுன்சிலர்கள் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம்

Update: 2023-05-09 18:45 GMT

குழித்துறை, 

நல்லூர் பேரூராட்சி அலுவலகம் மார்த்தாண்டத்தை அடுத்து குழித்துறை ரெயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இந்த பேரூராட்சி அலுவலகத்தை அங்கிருந்து முள்ளஞ்சேரி பகுதிக்கு மாற்றம் செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது. இதை கண்டித்தும் பேரூராட்சி அலுவலகத்தை தற்போது உள்ள இடத்திலேயே தொடர்ந்து இயக்க வேண்டும் என்றும், இது குறித்து விவாதிக்க அவசர கவுன்சில் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முன்தினம் நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் துணைத்தலைவர் உள்பட 11 உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், பேச்சு வார்த்தையில் அவசரக்கூட்டத்தை நேற்று நடத்துவதாக உறுதி அளித்தை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நல்லூர் பேரூராட்சி அவசர கவுன்சில் கூட்டம் தலைவர் வளர்மதி தலைமையில் நடந்தது. அப்போது விவாதத்தில் நல்லூர் பேரூராட்சி அலுவலக இடமாற்றத்துக்கு துணைத்தலைவர் உள்பட 11 உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். 3 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். மேலும் 3 உறுப்பினர்கள் இடம் மாற்றுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இந்த முடிவை பேரூராட்சி மினிட் புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்ய வலியுறுத்தியும் தலைவர் தரப்பில் மறுக்கப்பட்டது. இதை கண்டித்து பேரூராட்சி துணைத் தலைவர் அர்ச்சுனன் தலைமையில் உறுப்பினர்கள் எட்வின் ராஜகுமார், திவ்யா, அனீஸ் நிஜி, சுபியா, ஜெயபாலன், நிர்மல் ராவன்டிஸ், பாலசேகரன், ராஜன், புஷ்பலதா, குமார் ஆகிய 11 பேரும் நேற்று மாலை முதல் மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்